வாக்கு எண்ணிக்கையின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது என்று எதிர்கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆகையால் மின்னணு இயந்திரத்தை மட்டுமல்லாமல் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குறிப்பாக வடக்கு மாநிலங்களில் பா.ஜ.க-வினர் EVM மிஷின்களை மாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுகிறது. இந்த நிலையில், காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதாவது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடப்பது தொடர்பான ஆதாரங்கள் இருந்தும் தேர்தல் ஆணையம் கண்டும் காணாமல் செயல்படுவது வருத்தத்தை தருகிறது. மேலும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் மூலம் பாலகோட் தாக்குதல் போன்ற பொய்யான நம்பிக்கையை மக்கள் மனதில் பா.ஜ.க விதைக்க எத்தனிக்கிறது. இதன்மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றுவதற்கான வழியை உருவாக்கியிருப்பதாக மெகபூபா முஃப்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.