இந்தியா

“நாம் அழிவின் விளிம்பில் இருக்கிறோம்” - ஒரு பத்திரிகையாளரின் அதிர்ச்சித் தகவல்

காணும் இடமெங்கும் வறட்சி. பேரழிவு குறித்து நமக்கொரு சித்திரம் இருக்கும் அல்லவா? அதன் சுவடு வழி நெடுகிலும் விரிந்திருக்கிறது.

“நாம் அழிவின் விளிம்பில் இருக்கிறோம்” - ஒரு பத்திரிகையாளரின் அதிர்ச்சித் தகவல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் பேரழிவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். சமீபத்தில் ஐ.நா சபையும், இயற்கை சீரழிவு பற்றி மிக முக்கியமானதொரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையையும், தான் மேற்கொண்ட பயணத்தில் கவனித்ததையும் ஒப்பிட்டு, முக்கியமானதொரு பதிவை செய்துள்ளார் பத்திரிகையாளர் நியாஸ் அகமது. அவரின் பதிவு பின்வருமாறு.

சென்னை, ஈரோடு, பொள்ளாச்சி, வால்பாறை, அதிரப்பள்ளி, திரிச்சூர், மல்லபுரம், நிலாம்பூர், முதுமலை, பந்திப்பூர், ஆசனூர், திம்பம், சத்தியமங்கலம், கோபிச்செட்டிபாளையம், ஈரோடு.

இந்த தடத்தில்தான் நாங்கள் பயணித்தோம். இந்த பாதையில் இதற்கு முன்பும் பல முறை பயணித்திருக்கிறோம். ஆனால், இப்போது நாங்கள் பார்த்த காட்சி இதற்கு முன் எப்போதும் காணாதவை. பின் எப்போதும் காணக் கூடாதவை.

காணும் இடமெங்கும் வறட்சி. பேரழிவு குறித்து நமக்கொரு சித்திரம் இருக்கும் அல்லவா? அதன் சுவடு வழி நெடுகிலும் விரிந்திருக்கிறது.

சூழலியல் குறித்த Intergovernmental Science-Policy Platform on Biodiversity and Ecosystem Services அறிக்கையை வடிவமைத்த குழுவுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் பாப் வாட்சன் மொழியில் சொல்ல வேண்டுமானால், “நாம் பிரச்னையில் இருக்கிறோம்”.

இந்த அறிக்கையானது 10 லட்சம் உயிரினங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாக நம்மை எச்சரித்தது. இது மிகை அல்ல. மக்களை அச்சுறுத்த வேண்டுமென்பதற்காக கூறப்படவில்லை என்பதற்கு எங்களின் இந்த பயணமே சாட்சி. வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயிரினங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளன. பார்த்த ஒவ்வொரு விலங்கின் முகத்திலும் துயரின் ரேகை. பந்திப்பூரும், முதுமலையும் இனி நினைவில் மட்டும் வாழும் காடாக இருக்கப் போகிறது. கூடலூர் குளிர்ந்தது என்பது இனி இறந்தகாலம்.

ஏதோ 10 லட்சம் உயிரினங்கள் தானே? அதில் மனிதன் இல்லைதானே என்று கடந்து சென்றுவிட முடியாது. ஏனெனில், செவ்விந்தயர் கூறியது போல, “ உயிரின் வலையை நெய்தது மனிதன் அல்ல. அவன் அதில் ஓர் இழை மட்டும்தான். அந்த வலைக்கு அவன் செய்வதெல்லாம் அவன் தனக்குத் தானே செய்துகொள்வது தான்.” தப்பிக்க வழி இல்லையா? என்றால் ‘இருக்கிறது’ என்பதுதான் பதில்.

மீண்டும் Intergovernmental Science-Policy Platform on Biodiversity and Ecosystem Services அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயத்தையே சுட்டிகாட்டுகிறேன். “மனிதன் நுகர்வை குறைக்க வேண்டும், பணம் குறித்த நம் புரிதல்கள் மாற வேண்டும், அனைத்தையும் பணத்தை கொண்டே மதிப்பிடுவதை அரசும், தனி மனிதர்களும் நிறுத்த வேண்டும். ஒட்டு மொத்தமாக நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்று தீர்வை முன் வைக்கிறது அந்த அறிக்கை.

மீண்டும் சொல்கிறேன், தென் இந்தியாவின் வளமான பகுதி, உலகின் பல அரிய உயிரினங்களுக்கான வாழ்விடம் என போற்றப்படும் பகுதியின் நிலையே இதுவென்றால், பிற பகுதிகளின் நிலை குறித்து கூற தேவையில்லை.இந்த எச்சரிக்கைக்கும் செவி கொடுக்க தவறுவோமாயின், இதுவே இறுதி எச்சரிக்கையாகவும் இருக்கக் கூடும்.

- மு.நியாஸ் அகமது, பத்திரிகையாளர்

banner

Related Stories

Related Stories