ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தின் 4 தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பீகார் (8), ஜார்கண்ட் (3), மத்தியபிரதேசம் (8), பஞ்சாப் (13), மேற்கு வங்காளம் (9), உத்தர பிரதேசம் (13), இமாசல பிரதேசம் (4), சண்டிகர் (1) என மொத்தம் 59 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.
தமிழக சட்டசபையில் காலியாக உள்ள 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்றது. மீதமுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
காலை 7 மணிக்குத் துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே நடந்துமுடிந்த 6 கட்ட வாக்குப்பதிவோடு, இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளுக்கும் சேர்த்து வரும் மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.