நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரை பணிகளை முடித்துவிட்ட பின், நேற்று டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் தலைமையகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அவருடன் பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷாவும் இருந்தார்.
5 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி, முதன்முறையாக செய்தியாளர்களை சந்திக்கிறார் என்றதும், செய்தியாளர்களும் ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்திருந்தனர்.
ஆனால், வழக்கம்போல் மோடியிடம் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காமல், தான் ஒரு கட்சி தொண்டன் மட்டுமே. கட்சித் தலைவர் பதில் கூறுவார் என சொல்லிவிட்டு அமித்ஷாவுக்கு கேள்விகளை ‘பாஸ்’ செய்துவிட்டார்.
சுமார் 52 நிமிடங்கள் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடி 12 நிமிடம் மட்டுமே பேசியிருப்பதாகவும், அதிலும் பெரும்பாலும், பிரசாரம் மற்றும் தேர்தல் குறித்து மட்டுமே பேசியிருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், மோடியின் 5 ஆண்டு ஆட்சியில் அவர் செய்தியாளர்களை சந்தித்துள்ளது இது முதல் முறை என்பதால் பிரபல ஆங்கில நாளிதழான தி டெலிகிராஃப், பத்திரிகையின் முதல் பக்கத்தில் மோடியின் பேட்டி குறித்து செய்தி வெளியிடுவதற்காக 7 காலத்திற்கு (Column) இடம் ஒதுக்கியிருந்தது.
ஆனால், ப்ரஸ் மீட்டில் அமித்ஷாவிடம் அனைத்து கேள்விகளையும் தள்ளிவிட்டார் மோடி. இதனை குறிப்பிடும் வகையில், 36, 37,41, 44, 45, 47, 51 என்ற நிமிட இடைவெளியில் மோடியிடம் முன்வைக்கப்பட்ட கேள்விகளை அவர் அமித்ஷாவுக்கு பாஸ் செய்த புகைப்படங்களுடன் முன்பக்கத்தில் பதிவிட்டுள்ளது தி டெலிகிராஃப்.
மேலும், செய்தியாளர் சந்திப்பின் போது, எந்த கேள்விகளுக்கும் பிரதமர் மோடி பதிலளிக்காததால் அதனை சுட்டிக்காட்டும் வகையில், புகைப்படங்களுக்கு மேலே கிராஸ் ஸ்பீக்கர் குறியீடும், கீழே காலியாகவும் டெலிகிராஃப் பத்திரிகையில் இடம் விடப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமல்லாமல், 1,817 நாட்களுக்கு பிறகு மோடி, செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார் என்ற செய்தி நாட்டையே பேசவிடாமல் செய்துவிட்டது. அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் மோடியும் பேசவில்லை என்பது வேறு விஷயம்.