மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து உள்ளன. இறுதியாக 7-ம் கட்ட தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. 8 மாநிலங்களில் மீதமுள்ள 59 தொகுதிகளுக்கு மே 19ம் தேதி அன்று நடைபெறுகிறது.
அதிகபட்சமாக பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேசத்தில் தலா 13 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளுக்கும், பீகாரில் 8 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 3 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சண்டிகர் மாநிலத்தில் மீதமுள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கும் அன்றைய தினமே தேர்தல் நடக்க உள்ளது.
மேற்கு வங்காளத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக அங்குள்ள 9 தொகுதிகளில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நேற்று இரவுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. மீதமுள்ள 50 தொகுதிகளில் இன்று மாலை தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது.
தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெற உள்ள நான்கு தொகுதிகளிலும் இன்றுடன் பிரசாரம் முடிவுக்கு வருகிறது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
7-வது கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும் 59 தொகுதிகள் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதிகளாகும். இந்த தொகுதிகளில் உள்ள ஓட்டுச் சாவடிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
இந்நிலையில், இறுதிக்கட்ட தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.