பிரதமர் மோடி சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்துகள் சர்ச்சைகளைக் கிளப்பியது. இந்நிலையில், அவர் பதில்களை ஆவணங்களைப் பார்த்துப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் பேட்டியின்போது, புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக நடைபெற்ற பால்கோட் தாக்குதலில், இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் ரேடாரில் இருந்து தப்பிக்க மேகமூட்டத்தின்போது தாக்குதல் நடத்தலாம் என தான் ஐடியா கொடுத்ததாக மோடி கூறினார்.
அதோடு, 1980-களில் தான் டிஜிட்டல் கேமிரா மற்றும் இ-மெயில் ஆகியவற்றை பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார். டிஜிட்டல் கேமராவும், இ-மெயிலும் பயன்பாட்டுக்கு வந்ததே 90-களின் மத்தியில் தான் என்பதால் மோடியின் பொய்க் கதைகளை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
இதற்கிடையே, பிரதிக் சின்ஹா எனும் பத்திரிகையாளர் தனது ட்விட்டர் பதிவில், மோடி பதில்களை ஆவணங்களைப் பார்த்துப் பார்த்துச் சொல்வதாக குற்றம் சாட்டி, அதற்கான பேட்டி ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார்.
பேட்டியின்போது, நெறியாளரிடம் தேர்தல் பணிகளுக்கு மத்தியிலும் தான் கவிதை எழுதியதாக கூறுகிறார் மோடி. அது தொடர்பாக தான் எழுதிவைத்த தாள்களைத் தேடும்போது நேர்காணலுக்கான கேள்விகளுடன் பதில்களும் அடங்கிய ஆவணங்கள் இருப்பது பதிவாகியுள்ளது.
நெறியாளர் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் அதன் எதிரிலேயே உரிய பதில் இருப்பது இந்தக் காட்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. திட்டமிடப்பட்ட நேர்காணலில் எழுதித் தரப்பட்ட பதில்களை மோடி பேசிய தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.