உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அயோத்தி நில உரிமை குறித்த வழக்கை விசாரித்து வருகிறது.
கடந்த மார்ச் 8ம் தேதி அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பாக பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண, முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவை நியமித்தது உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு.
வாழும் கலை அமைப்பின் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ராம் பஞ்சு ஆகியோர் மத்தியஸ்தர் குழுவில் உள்ளனர். இந்த குழு அயோத்தி நிலம் தொடர்பாக ஆலோசனை நடத்தி இடைக்கால அறிக்கையை நேற்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இதனையடுத்து, மத்தியஸ்தர் குழுவின் அறிக்கை மீது உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று விசாரித்தது.
அப்போது, அயோத்தி வழக்கில் நியமிக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர் குழுவின் இடைக்கால அறிக்கை திருப்தியளித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சுமூக பேச்சுவார்த்தை எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், முழுமையான சமரச பேச்சுவார்த்தையை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் முடிக்கவேண்டும் எனக் கூறி அவகாசம் அளித்துள்ளனர்.