மத்திய பிரதேச மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டு பேசினார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அப்போது அவர், தான் ஏன் மோடியை திருடன் எனக் கூறினேன் என விளக்கமளித்தார்.
“சத்தீஸ்கரில், தேர்தல் பிரசார கூட்டமொன்றில் நான் பேசும்போது, 'காவலாளி ஒருவர், ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும், 15 லட்சம் ரூபாய் போடப்படும்; 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றாரே, அதைச் செய்தாரா' எனக்கேட்டேன்.
அப்போது கூட்டத்தில் இருந்து, 'திருடன்' என, ஒருவர் கத்தினார். முதலில், எனக்கு அது சரியாகக் கேட்கவில்லை. அதனால், அந்த இளைஞரைப் பார்த்து 'என்ன சொன்னீர்கள்?' எனக் கேட்டேன். அவர் மீண்டும், 'திருடன்' என்றார்.
அப்படித்தான், “காவலாளி எனச் சொல்லிக் கொள்பவர் ஒரு திருடன்” என்ற பதம் உருவானது. எனப் பேசியுள்ளார் ராகுல் காந்தி. பிரதமர் மோடியை திருடன் எனப் பேசியது தேர்தல் விதிமுறை மீறல் என உச்சநீதிமன்றம் தெரிவித்து ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி, நேற்று ராகுல் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பேசிய ராகுல், “மோடி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். மீண்டும் அவரால் பிரதமராக முடியாது. மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி ஆகிய திட்டங்களின் மூலம் ஏராளமான ஏழைகள் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறித்துக்கொண்டார். மோடியின் உதவியால், நாட்டில் கறுப்புப்பணம் வைத்திருக்கும் அனைவரும், அவற்றை வெள்ளையாக மாற்றி விட்டனர்.” எனப் பேசினார் ராகுல்.