அமேஸான் கிண்டில் நிறுவனம் 'Pen to publish 2018' எனும் பெயரில் இளம் எழுத்தாளர்களுக்கென போட்டி ஒன்றை நடத்தியது. கடந்தமுறை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி எழுத்தாளர்களுக்கு நடத்தப்பட்ட இப்போட்டி இந்த ஆண்டு தமிழுக்கும் விரிவுபடுத்தப்பட்டிருந்தது.
போட்டியில் வென்றவர்கள் விவரம் நேற்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினர்களின் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது. மூன்று மொழிகளிலும் 10,000 வார்த்தைகளுக்கு மேலான படைப்புகள், 2,000 - 10,000 வார்த்தைகளுக்கு இடையேயான படைப்புகள் என இரு பிரிவுகளில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்தியா முழுவதும் இப்போட்டியில் பங்கேற்ற 4,000-க்கும் அதிகமான படைப்புகளில் இருந்து, வாசகர்கள் ஆதரவின் அடிப்படையிலும், நடுவர் குழுவின் மதிப்பீடு அடிப்படையிலும் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழ் மொழிப் படைப்புகளுக்கான நடுவர்களாக எழுத்தாளர்கள் இரா.முருகன், சுந்தரி வெங்கட்ராமன் ஆகியோர் செயல்பட்டனர்.
அதன்படி, தமிழ் மொழிக்கான நெடும் படைப்பு பிரிவில் மருத்துவர் செந்தில்பாலன் மாணிக்கம் எழுதிய ‘பரங்கிமலை இரயில் நிலையம்’ எனும் த்ரில்லர் நாவல் ரூ. 5 லட்சம் பரிசை வென்றது. இந்நூல் கிண்டிலில் ஆயிரத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்று வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.
குறும்படைப்பு பிரிவில் விக்னேஷ் சி செல்வராஜ், கவிஞர் இசையின் கவிதைகளை முன்வைத்து எழுதிய ‘தேனாம்பேட்டையின் பீக் ஹவர் சிக்னலில் குத்தாட்டம் போடச்செய்யும் இசை’ எனும் நீள்கட்டுரை ரூ. 50,000 பரிசை வென்றது.