வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயலானது அதி தீவிர புயலாக வலுப்பெற்று ஒடிசா மாநிலத்தை நோக்கி நகர்ந்து செல்கிறது. இது நாளை (மே 3) பிற்பகலில் பூரி அருகே கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஃபானி புயல் கரையை கடக்கும் சமயத்தில் சுமார் 200 கிமீ வேகத்தில் பலத்த சூறைக்காற்றும், மிக கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, புயல் எச்சரிக்கையை முன்னிட்டு ஒடிசா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அம்மாநில அரசு மாற்றம் செய்துள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஒடிசா வானிலை மையம் இயக்குநர் புஸ்வாஸ், ஃபானி புயலால் ஒடிசாவின் கடற்கரையோர மாவட்டங்களான 11 பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் கடல் அலை ஊருக்குள் வரக்கூடும் என தெரிவித்துள்ளார்.
இது மட்டுமில்லாமல், ஒடிசாவின் அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் மேற்கு வங்கத்துக்கும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே சென்னையில் இருந்து ஒடிசாவுக்கு செல்லக்கூடிய 9 ரயில்களும், கிழக்கு கடற்கரை ரயில்வே 22 ரயில்களின் சேவைகளையும் ரத்து செய்துள்ளது.
ஃபானி புயல் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, மீட்பு பணிகளுக்கு அனைத்து விமான நிலையங்களும் நிறுவனங்களும் உதவ வேண்டும் எனவும், முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், ஒடிசாவில் அமைக்கப்பட்டுள்ள 900 நிவாரணம் முகாம்களில் மட்டுமே நிவாரண பொருட்களை கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஃபானி புயல் கரையை கடக்கவுள்ள நிலையில் மே 5ம் தேதிவரை ஒடிசா மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.