காஷ்மிர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பிப்.,14ம் தேதி அன்று சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் இரண்டு தமிழர்கள் உட்பட 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இது நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர் புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பின்பு, ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பின் தலைவரான மசூத் அசாரின் சகோதரர் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
சமீபத்தில் இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலை அடுத்து ஐ.எஸ். மற்றும் ஜெய்ஷ்- இ - அமைப்பு இந்தியாவிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், புல்வாமா போன்ற பல பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவரான மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
இதற்கு முன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சியை இந்தியா பல மேற்கொண்ட போது, சீனா அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தது. இம்முறை சீனாவும் அதற்கு ஒப்புதல் அளித்ததால், தேடப்படும் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் மசூதின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.