ராணுவத்தில் உள்ள வீரர்களுக்கு முறையான உணவு வழங்குவதில்லை என்றும், அதில் முறைகேடு நடப்பதாக குற்றஞ்சாட்டி பாதுகாப்பு படை வீரர் தேஜ் பகதூர் யாதவ் கடந்த 2017ம் ஆண்டு முகநூலில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
அதற்கு பிறகு, தேஜ் பகதூர் யாதவை ராணுவ பணியில் இருந்து நீக்கியது மோடி அரசு.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான 7ம் கட்ட வாக்குப்பதிவு வருகிற மே 19ம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதூர் சுயேட்சை வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தார்.
பின்னர், சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து வேட்புமனுத் தாக்கல் செய்தார் தேஜ் பகதூர். இந்நிலையில், வாரணாசி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுத்தாக்கலின் மீதான பரிசீலனை நடைபெற்றது.
அப்போது, மோடிக்கு எதிராக போட்டியிடும் தேஜ் பகதூரின் வேட்பு மனுவில் சில முரண்பாடுகள் உள்ளதாகக் கூறி தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார். இது குறித்து விளக்கமளிக்குமாறும் உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து தனது வழக்கறிஞர் மூலம் தேவையான ஆவணங்களை தாக்கல் செய்த பின்னரும் தேஜ் பகதூரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிராகரிப்பு வேண்டுமென்றே நடத்தப்பட்டிருப்பதாக குற்றஞ்சாடிய தேஜ் பகதூர், தேர்தல் அதிகாரியின் செயலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.