ஜெட் ஏர்வேஸ் விமான சேவை முடங்கியதால் ஏர் இந்தியா போன்ற முன்னணி விமான நிறுவனங்கள் கூடுதல் விமான சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், ஏர் இந்நியா விமான சேவை திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டது.
இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இந்த பாதிப்பு ஏற்பட்டதால் பயணிகள் தவித்தனர். அதிகாலை 3.30 மணியளவில் ஏர் இந்தியா விமான சேவையின் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமான போக்குவரத்து 5 மணிநேரத்திற்கு முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பு குறித்து ஏர் இந்தியா நிறுவனம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
பின்னர் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் காலை 8.45 மணிக்கு கோளாறு சரி செய்யப்பட்டதால் ஏர் இந்தியா விமான சேவை தொடங்கியது. மேலும், விமானங்கள் புறப்படும் நேரம் மற்றும் தரையிறங்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டதற்கான மறு அட்டவணையையும் ட்விட்டரில் ஏர் இந்தியா வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், இரவு 8.30 மணிவரை 155 ஏர் இந்தியா விமானங்கள் 2 மணிநேர இடைவெளியில் தாமதமாக்கப்பட்டுள்ளது என ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.