இந்தியா

ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற கோமதிக்கு வைகோ பாராட்டு!

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Vaiko - Gomathi Marimuthu
Vaiko - Gomathi Marimuthu
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

“கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நடைபெற்று வருகின்ற ஆசிய தடகளப் போட்டிகளில், திருச்சியைச் சேர்ந்த கோமதி, இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார். அவருக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

2013 முதல் பல்வேறு பன்னாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வரும் கோமதி, தொடக்கத்தில் பல தோல்விகளைச் சந்தித்தாலும் மனம் தளரவில்லை. தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொண்டு வந்தார்.

கோமதியின் தந்தை மாரிமுத்து, 2016-ம் ஆண்டு, புற்றுநோயால் இயற்கை எய்தினார். அடுத்த சில மாதங்களில், கோமதிக்குப் பயிற்சிகள் அளித்து, ஊக்கத்துணையாக இருந்து வந்த பயிற்சியாளர் காந்தி, திடீர் மாரடைப்பால் இயற்கை எய்தினார்.

Gomathi Marimuthu
Gomathi Marimuthu

2016-ம் ஆண்டில், கோமதிக்கும் அடிவயிற்றில் வலி ஏற்பட்டு, மருத்துவம் பெற்றார். இத்தகைய சோதனைகள் அனைத்தையும், நெஞ்சுரத்தால் எதிர்கொண்ட கோமதி, இன்று சாதனை படைத்திருக்கிறார்.

“அடுக்கடுக்கான துன்பங்களைக் கண்டு நான் மனம் தளர்ந்து விடவில்லை; என்னுடைய திறமையில் முழு நம்பிக்கை கொண்டு இருந்தேன்; என்னால் சாதிக்க முடியும் என உறுதி கொண்டு இருந்தேன்; அதன் விளைவே இந்த வெற்றி" என்கிறார் கோமதி. இன்று வருமான வரித்துறை அதிகாரியாகவும் திகழ்கிறார்.

கோமதியின் வாழ்க்கையும் சாதனையும், தமிழக மகளிருக்கு மிகுந்த ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. அவருக்கு, தமிழக அரசு உரிய மதிப்பளித்துச் சிறப்பிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார் வைகோ.

banner

Related Stories

Related Stories