இலங்கையில் தேவாலயங்கள், ஹோட்டல்கள் என பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் தேவாலயத்தில் குழுமியிருந்த சூழலில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
கொச்சிக்கடை தேவாலயம், கட்டுவப்பிடிய தேவாலயம், கிங்ஸ்பெரி தேவாலயம் பட்டிகலோயா தேவாலயம், ஷாங்க்ரி லா, சின்னமன் கிராண்ட் மற்றும் தெஹிவளையில் உள்ள ஹோட்டல், குடியிருப்புப் பகுதி என 8 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 450-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் வெளிநாட்டவர்களும் அடங்குவர்.
காயமடைந்த பலரும் சிகிச்சைக்காக கொழும்பு, மட்டக்களப்பு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் குண்டுவெடிப்பைத் தடுக்க பல்வேறு இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.