ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா-பாகிஸ்தான் பகுதியில் அமைந்த தீவிரவாத முகாம் மீது விமானப்படை தாக்குதல் நடத்தியபோது இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டார்.
இதையடுத்து பல்வேறு நாடுகளின் கடும் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் ராணுவம் விங் கமாண்டர் அபிநந்தனை 2 நாட்களில் விடுவித்தது.
இந்நிலையில், விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு, போர்க்கால வீர தீர செயலுக்கான 'வீர் சக்ரா' விருது வழங்க இந்திய விமானப்படை பரிந்துரை செய்துள்ளது.
இதற்கிடையே, அபிநந்தன் ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் இருந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக மேற்குப்பகுதி விமானப்படை தளத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என இந்திய விமானப்படை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.