ஊழல் வழக்கில் கைதான பாதுகாப்பு முகவர் சுஷன் மோகன் குப்தா என்பவர் அளித்த ஜாமீன் வழக்கில், ஆஜரான அமலாக்கப்பிரிவைச் சேர்ந்த வழக்கறிஞர், “விஜய் மல்லையா, நீரவ் மோடி போல கடந்த சில வருடங்களில் 36 தொழிலதிபர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
ஊழல் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுஷன் மோகன் குப்தா அளித்த மனுவில், “சமூகத்தில் மதிப்புமிக்க என் பெயரைக் களங்கப்படுத்தாமல் ஜாமீன் வழங்கவேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த வழக்கறிஞர் சம்வேதன வர்மா, “சமூகத்தில் பெரும் மதிப்புமிக்க விஜய் மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி, மெகுல் சோக்ஷி உள்ளிட்ட 36 தொழிலதிபர்கள் கடந்த சில ஆண்டுகளில் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். மதிப்பு மிக்கவர்கள் என்பதால் மோசடி செய்யமாட்டார்கள் எனக் கூற முடியாது” எனத் தெரிவித்தார்.
“கறுப்புப் பணத்தை ஒழிப்போம்; அதைப் பிரித்து நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் தருவோம்” எனச் சொல்லி ஆட்சிக்கு வந்த மோடியின் ஆட்சியில் இத்தனை தொழிலதிபர்கள் நாட்டை ஏமாற்றி வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றதாக அமலாக்கத்துறையே நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.