தமிழகத்தில் புதிதாக உள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் 1450 இடங்களும் கிடைத்துவிட்டன. கோவை மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 100 இடங்கள் கேட்டுள்ளோம். விரைவில் கூடுதல் இடங்கள் கிடைக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீப ஒளி பட்டாசு தீக்காயம் ஏற்படுவோருக்கு 12 படுக்கைகள் கொண்ட பிரத்யேக வார்டு தயார் நிலையில் உள்ளது. அதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்கு பின் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி:
பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து நேராத வண்ணம் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பிலும், தீயணைப்புத் துறை சார்பிலும் அதனை கையாள விழிப்புணர்வு நடத்தப்படுகிறது. பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டால் உடனடியாக காப்பாற்ற தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 2018ல் 123 பேர் , 2019ல் 242 பேர், 2020ல் 154 பேர் பட்டாசு விபத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்ற அவர், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீ விபத்தால் சிகிச்சை பெறுபவர்கள் குணமடைந்து வருகின்றனர் என்றார். இந்த ஆண்டு எந்த விபத்தும் வரக்கூடாது என கருதுகிறோம்.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீக்காய சிகிச்சை பிரிவில் 2வது தளத்தில் 12 பிரத்யேக படுக்கைகள், அதிதீவிர சிகிச்சைக்கு தரைதளத்தில் 10படுக்கைகள் என மொத்தம் 22 படுக்கைகள் தயாராக உள்ளன. வரும் சனிக்கிழமை 8வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என்று கூறிய அமைச்சர், 50,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் போட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
2வது தவணை தடுப்பூசி செலுத்த 60லட்சத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர் என்று கூறிய அவர், தமிழகத்தில் இதுவரை 5.93 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார். தடுப்பூசியை பொறுத்தவரரை 60லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு கலந்தாய்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்ற அமைச்சர், எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வில் வன்னியர்களுக்கான 10.5% ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுமா என்பதை சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் தெரிவிக்கப்படும் என்றார்.
டெல்லி, பஞ்சாப்-ல் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளதாகவும், தமிழகத்தில் டெங்கு பரிசோதனை கடந்த ஆண்டு 32,260 எடுத்தோம். நடப்பாண்டு 1லட்சத்து 8ஆயிரத்து405 பேருக்கு எடுத்துள்ளோம் என்றார். தமிழகத்தில் புதிதாக உள்ள 11மருத்துவக் கல்லூரிகளில் 1450 இடங்களும் கிடைத்து விட்டன. கோவை மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 100 இடங்கள் கேட்டுள்ளோம் என்றும், நிச்சயம் இந்த கூடுதலான இடங்கள் கிடைக்கும் என்றும் கூறினார்.