தமிழகத்தின் 16வது சட்டப்பேரவைக்காக ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (மே 2) எண்ணி முடிக்கப்பட்டிருக்கின்றன.
இதில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிக்கனியை ருசித்துள்ளது. குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகம் தனிப் பெரும்பான்மை பெற்று சாதனை படைத்துள்ளது.
தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்ட முதலே முன்னிலை வகித்து வந்த திமுகவுக்கு இறுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிட்டியுள்ளது.
அதுபோக, அதிமுகவின் அமைச்சர்களாக இருக்கக் கூடியவர்களையே திமுக வேட்பாளர்கள் தோல்வியடையச் செய்துள்ளனர். இந்நிலையில் தமிழக தேர்தலில் அதிகபடியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதில், மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளராக சாதனைப்படைத்துள்ளார் ஆத்தூரில் போட்டியிட்ட திமுகவின் துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி. சரியாக ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 571 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை டெபாசிட் இழக்கச் செய்துள்ளார்.
அடுத்தபடியாக கொளத்தூரில் தலைவர் மு.க.ஸ்டாலின், சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் உதயநிதி ஸ்டாலின், திருவண்ணாமலையில் ஏ.வ.வேலு, பூந்தமல்லியில் கிருஷ்ணசாமி என தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியல் நீள்கிறது.
சென்னை மண்டலத்தில் கொளத்தூரில் போட்டியிட்ட தலைவர் மு.க.ஸ்டாலின் 70 ஆயிரத்து 384 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும் அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளராக எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட பழனிசாமி மட்டுமே இடம் பெற்றுள்ளார் என தேர்தல் ஆணைய பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.