தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்து முடிந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை, பல கட்ட சுற்றுகள் முடிந்து தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
ஆரம்பம் முதல் தி.மு.க கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணியில் போட்டியிட்ட அமைச்சர்கள் மற்றும் நட்சத்திர வேட்பாளர்கள் பலரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
தி.மு.க கூட்டணி 166 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அ.தி.மு.க கூட்டணி 68 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களை தி.மு.க கூட்டணி முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.
தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளரான ஐ.பெரியசாமி திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்துள்ளார்.
தி.மு.க வேட்பாளர் ஐ.பெரியசாமி 1,63,689 வாக்குகளும், பா.ம.க வேட்பாளர் திலகபாமா 29,607 வாக்குகளும் பெற்றுள்ளனர். தி.மு.க வேட்பாளர் ஐ.பெரியசாமி 1,34,082 வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
இதன்மூலம் தமிழகத்திலேயே மிகஅதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றவராக தி.மு.க-வின் ஐ.பெரியசாமி இருக்கிறார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வின் முன்னாள் முக்கிய அமைச்சரான நத்தம் விஸ்வநாதனை தோற்கடித்து வென்ற நிலையில், இந்த முறை வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளார் ஐ.பெரியசாமி.