கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளரின் ஆதரவாளர்கள், வைசியாள் வீதியில் வாக்களிக்க வருபவர்களிடம் தாமரைக்கு வாக்களிக்க கூறி, அருகே உள்ள கணபதி ஏஜென்சி என்ற கடையில், டோக்கன் வழங்கியுள்ளனர். இந்த டோக்கனை கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளனர்.
இந்த சட்ட விரோத கும்பலை பூத் ஏஜெண்டுகள் பிடித்து ஒப்படைத்துள்ளனர். அப்போது, பா.ஜ.கவினர் பூத் ஏஜெண்டுகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதற்கிடையே, பிடிபட்ட நபர்களை காவல்துறையினர் விடுவித்த நிலையில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மயூரா ஜெயகுமார் நடவடிக்கை எடுக்க ஒப்படைத்தும் கண்டுகொள்ளவில்லையென புகார் கூறி, செல்வபுரம் சாலை, வைசியாள் வீதியில் சாலை மறியலில் ஈடுபட்டார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சமரச முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து டோக்கன் வினியோகித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்ததையடுத்து, சாலைமறியல் கைவிடப்பட்டது. பா.ஜ.கவினர் பணம் வழங்க டோக்கன் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.