தினமலர் நாளிதழில் நேற்று அ.தி.மு.க அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் சாதனை குறித்து வெளியிடப்பட்ட விளம்பரத்தை இன்றைய நாளிதழில் இணைத்து தேர்தல் விதிமுறைகளை மீறி அ.தி.மு.கவினர் வீடு வீடாக சென்று விநியோகம் செய்திருக்கிறார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பில் மீண்டும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று தினமலர் நாளிதழில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சாதனைகள் என்ற பெயரில் முழுப்பக்க விளம்பரம் அ.தி.மு.க சார்பில் வெளியிடப்பட்டது.
தேர்தல் பரப்புரை நிறைவு பெற்ற நிலையில் நேற்று வெளியான விளம்பரம் அடங்கிய தினமலர் நாளிதழை 15,000த்திற்கும் மேற்பட்ட பிரதிகளை இன்று வெளியான நாளிதழில் இணைத்து அ.தி.மு.கவினர் வீடு வீடாக விநியோகம் செய்திருக்கிறார்கள்.
அ.தி.மு.க தலைமை கழகம் சார்பில் தினமலர் நாளிதழில் வெளியிடப்பட்ட விளம்பரத்தை இன்றைய பேப்பருடன் தேர்தல் விதிமுறைகளை மீறி அ.தி.மு.கவினர் விநியோகம் செய்வதை அறிந்த தி.மு.கவினர் அதிமுகவினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் விரைந்து வந்து நாளிதழ்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.