1969 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 நாள் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உரையாற்றிய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆகஸ்ட் 15 அன்று மாநிலங்களில் நடைபெறும் சுதந்திர தின நிகழச்சிகளில் மாநில முதலமைச்சர்களுக்கு தேசிய கொடியை ஏற்றும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்தார்.
அவருடைய கோரிக்கையை ஏற்று ஜனவரி 26ம் நாள் மாநில ஆளுநர்களுக்கும் ஆகஸ்ட் 15 அன்று மாநில முதலமைச்சர்களுக்கும் மாநிலங்களில் தேசிய கொடியை ஏற்றும் உரிமை வழங்கப்பட்டு மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி தமிழ்நாட்டின் முதன்முதலில் 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் புனித ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின கொடியை ஏற்றினார். தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள அம்மாநில முதலமைச்சர்கள் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 அன்று தேசிய கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றதற்கு தலைவர் கலைஞர் அவர்கள்தான் முக்கிய காரணம்.
விடுதலை போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மரியாதை செய்யும் விதமாக 1974ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் கோட்டை கட்டப்பட்டது. அவருடைய வாரிசுகள் 202 பேருக்கு கலைஞரின் திமுக அரசு தலா 3 ஏக்கர் நிலம் வழங்கியது. கட்டபொம்மன் வாரிசுகளுக்கு 1996 முதல் உதவித் தொகை உயர்த்தி வழங்கப்பட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனின் 200வது ஆண்டு விழா 16-10-1999 அன்று அரசு விழாவாக கொண்டாடபட்டது. மத்திய அரசின் சார்பாக வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.
மருது சகோதரர்களுக்கு மணிமண்டபம் கட்டப்பட்டது. மருது சகோதரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவி ரூ.300/-லிருந்து 1996 முதல் ரூ.500/ ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர் மன்னர் புலித்தேவன் அவர்கள் வாழ்ந்த வீடு புதுபிக்கப்பட்டு 27.3.1998 அன்று தமிழக அரசால் திறந்து வைக்கப்பட்டது. அப்போது அவருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டது. சென்னை தலைமைசெயலகம் அருகே காமராஜர் சாலையில் சுதந்திர வளைவு ஒன்று அமைக்கப்பட்டது.
சுதந்திர போராட்டத்தின் நினைவாக சென்னை கிண்டியில் காந்திமண்டபம் கட்டப்பட்டது. அங்கு விடுதலை போராட்ட வீரர்களுக்கு தனியாக ஒரு நினைவு மண்டபம் கட்டப்பட்டு தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களால் 2.10.1998 அன்று திறந்துவைக்கப்பட்டது. குறிப்பாக, மூதறிஞர் ராஜாஜி, கர்ம வீரர் காமராஜ் ஆகியோருக்கு அங்கு நினைவு மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராஜருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டது. சென்னையிலும் நெல்லையிலும் அவருக்கு தமிழக அரசின் சார்பாக சிலைகள் வைக்கப்பட்டன. சென்னையில் மகாகவி பாரதியார் வாழ்ந்த வீடு நாட்டுடைமை ஆக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
சுதந்திர போராட்ட வீரர்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை வழங்கப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகளுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் 5-8-1997 முதல் ரூ.1,500/- என்பது ரூபாய் 3,000/-ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. 15.08.1997 முதல் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் ரூ.750/- இருந்து ரூ.1,500/-ஆக உயர்த்தப்பட்டது. 01.05.2007 முதல் இந்த ஓய்வூதியம் ரூபாய் 3,000 என்பது ரூ.4000மாக உயர்த்தி வழங்கப்பட்டது. அவர்களது குடும்ப ஓய்வூதியம் ரூ.1,500/-லிருந்து ரூ.2,000/-ஆக உயர்த்தப்பட்டது. இதனால் 1024 தியாகிகளும் 2251 சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பதாரர்களும் பயன்பெற்றனர்.
சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வேலைவாய்புகளிலும், பொறியியல் மாணவர் சேர்க்கையிலும் முன்னுரிமை வழங்கப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகிகளின் ஈமச் சடங்குகளுக்கு ரூ.2,000 வழங்கப்படுவதோடு தமிழக அரசின் வட்டாட்சியர் தகுதிக்கு குறையாத அரசு உயர் அதிகாரி ஒருவர் நேரில் சென்று இறந்த சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அரசு மரியாதை செலுத்தும் முறை நடைமுறைபடுத்தப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகிகள் 10 பேருக்கு நினைவு மண்டபங்கள் கட்டப்பட்டன. சென்னையில் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டு 10.06.2000 அன்று திறந்து வைக்கப்பட்டது. சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட இந்தியாவின் முதல் சட்டப் பல்கலைக் கழகத்திற்கு அண்ணல் அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகியும் முன்னாள் முதலமைச்சருமான பி.எஸ்.குமாரசாமி ராஜா அவர்களின் நூற்றாண்டு விழா இராஜபாளையத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவ்வூரின் முக்கிய சாலைக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டது.
வேலூர் கலகத்தில் கலந்து உயிர் நீத்த சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு 1996-2001 திமுக ஆட்சிக் காலத்தில் வேலூரில் நினைவு தூண் அமைக்கப்பட்டது. வேலூர் கலகம் நடந்து முடிந்த அதன் 300வது ஆண்டு விழா 10.07.2006 அன்று கொண்டாடப்பட்டது. இந்திய அரசு மூலம் வேலூர் கலக நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் நினைவாக தில்லையாடி வள்ளியம்மை நகர் உருவாக்கப்பட்டது. அந்நகரில் வள்ளியம்மாள் உயர்நிலைபள்ளி ஒன்றும் உருவாக்கப்பட்டு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் 13.08.1971 திறந்து வைக்கப்பட்டது.
சுதந்திர போராட்ட தியாகி சிங்காரவேலர் அவர்களுக்கு சென்னை இராயப்பேட்டையில் சிலை வைக்கப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகியும் எல்லைபோராட்ட வீரருமான ம.பொ.சிவஞானம் அவர்களது 100வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது ம.பொ.சி அவர்களுக்கு சென்னையில் சிலை நிறுவப்பட்டது.
நாமக்கல் கவிஞர் வீடு நினைவு இல்லமாக்கப்பட்டது. விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு சென்னை கிண்டியில் சிலை அமைக்கப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்கள் நினைவு தினம் 26-07-2007 அன்று தமிழ்நாடு அரசால் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது.
சுதந்திர போராட்ட தியாகி சர்தார் வேதரத்தினம்பிள்ளை அவர்கள் நினைவாக தமிழ்நாடு அரசு முயற்சி செய்து மத்திய அரசின் மூலம் அவரது நினைவாக சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. சுதந்திர போராட்ட வீராங்கணை ருக்குமணி லட்சுமிபதி அவர்களுக்கு சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. சென்னை எழும்பூரில் அவருக்கு சிலை வைக்கப்பட்டதோடு சென்னையில் அவர் வாழ்ந்த வீடு உள்ள மார்ஷல்ரோட் என்பது ருக்குமணி லட்சுமிபதி சாலை என்று பெயரிடப்பட்டது.
பாஞ்சாலங்குறிச்சி அருகில் சொர்ணகிரியில் சுதந்திர போராட்ட தியாகி சுந்தரலிங்கம் நினைவு கிராமம் ரூ.1,05,000/- அரசு செலவில் உருவாக்கப்பட்டு 27-03-1998 அன்று திறந்து வைக்கப்பட்டது. சுந்திரலிங்கத்தின் வாரிசுகள் 200 பேருக்கு அக்கிராத்தில் வீடுகள் கட்டி தரப்பட்டன. நூலகம் மற்றும் பூங்காவும் அங்கு அமைக்கப்பட்டன.
இந்திய விடுதலை போராடத்தின் பெருந்தலைவர்களின் ஒருவரும் இந்திய தேசீய ராணுவத்தின் நிருவன தலைவருமான மாவீரர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்களின் நூற்றாண்டு விழா அரசு விழாவாக நடத்தப்பட்டது. 1997ஆம் ஆண்டு அவருக்கு சென்னை கடற்கரை அருகே உள்ள காமராஜர் சாலையில் முழு உருவசிலை அமைக்கப்பட்டது.
இப்படி சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் பயன் அளிக்கும் விதமாக பல நல்ல திட்டங்களை திமுக அரசு நடைமுறைபடுத்தி நன்மை செய்தது. சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றி அவர்களுக்கு பெரும் மரியாதை செய்தது. அத்தோடு ஓய்வூதியம், மருத்துவவசதி, அவர்களுடைய வாரிசுகளுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கி தியாகிகளுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் பொருளாதார உறுதிபாட்டிற்கான பல நன்மைகளை திமுக அரசு செய்துக் கொடுத்தது.