மதுரை மத்திய தொகுதி தி.மு.க வேட்பாளர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது மக்கள் முன்னிலையில் பேசிய அவர், இந்தத் தேர்தல் அடிமைகளுக்கும் சுயமரியாதை இயக்கங்களுக்கும் இடையே நடக்கிற தேர்தல். ஆறரை கோடி மக்களை அடிமைகள் ஆட்சி செய்தது போதும். சுயமரியாதை உள்ளவர்களால் இந்த தமிழகம் ஆளப்பட வேண்டும். அதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் உதயசூரியன்.
ஆனால் தற்போது அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் சி.ஏ.ஏ சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று சொல்கிறார்கள். அ.தி.மு.க உறுப்பினர்கள் ஆதரித்துதானே வேளாண் சட்டம் நிறைவேறியது. எனவே பா.ஜ.கவுடனான கூட்டணியை விட்டு வெளியேற தயாரா என்று கேட்டால் அ.தி.மு.க முதல்வர் அமைதியாக இருக்கிறார்.
தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 5 வருடங்களாக இந்த தொகுதிக்கு நான் என்ன பணி செய்தேன் என்பதை பட்டியலிட்டு காட்டி இருக்கிறார். தொகுதி மேம்பாட்டு நிதியில் மீதம் 25 லட்சம் இருந்ததை திருப்பி அனுப்பி இருக்கிறார். இந்த நலத்திட்டங்களை கூறி இவர் வாக்கு சேகரித்து வருகிறார். இது ஒன்றே தி.மு.கவுக்கு போதும், அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வெற்றி பெறுவது உறுதி.
மேலும் அ.தி.மு.க வேட்பாளர்கள் எதை சொல்லி மக்களிடம் வாக்கு சேகரிப்பது என்பது தெரியாமல் திணறி வருகிறார்கள், அமைச்சர் செல்லூர் ராஜு நான் ஒரு தாய் இல்லா பிள்ளை எனக்கு வாக்களியுங்கள் என்று வாக்கு கேட்டு வருகிறார். அவர் தொகுதிக்கு செய்த திட்டப்பணிகள் குறித்து பேச முடியவில்லை. அ.தி.மு.க சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எனக்கு பிபி அதிகமாகிவிட்டது, சுகர் அதிகமாகி விட்டது என்று கூறி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.
இதுவே அ.தி.மு.க அமைச்சர்கள் வாக்கு சேகரிக்கும் கேலிக்கூத்தான நிலை. மேலும் மதுரைக்கு வரும் 2ம் தேதி பிரதமர் மோடி பிரச்சாரத்தை விரைவில் வர உள்ள நிலையில் அவருடன் மேடையில் பங்கேற்க தென் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
அ.தி.மு.கவின் வேட்பாளர்களை மோடியின் படத்தை புறக்கணித்து வருகிறார்கள். பா.ஜ.க வேட்பாளர்களும் மோடி படத்தை புறக்கணித்து வருகிறார்கள். அந்த அளவுக்கு பா.ஜ.க மீது தமிழக மக்களுக்கு வெறுப்பு உள்ளது என்பதே இதன் மூலம் வெட்டவெளிச்சமாக தெரிகிறது.