புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் ரகுபதியை ஆதரித்து திருமயம் பேருந்து நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ஜெயலலிதா அரசுக்கு உச்சநீதிமன்ற வழங்கிய தீர்ப்பு தான் சாட்சி, நான்காண்டு சிறைத் தண்டனை 100 கோடி ரூபாய் அபராதம் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் என்ற தீர்ப்பு யாருக்கு வந்தது. இந்த தீர்ப்பு அ.தி.மு.க அரசின் அலங்கோலத்தை பற்றிதான்.
ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் பொழுது எடப்பாடி பழனிச்சாமி அமைச்சராக இருந்தாரா என்பதே எனக்கு தெரியாது அந்த பெயரையும் நான் கேள்விப்பட்டதும் கிடையாது. கூவத்தூரில் கூடி முடிவெடுத்து முதலமைச்சர் ஆனார் எடப்பாடி பழனிச்சாமி, 4 ஆண்டுகள் 6 மாதமாக என்ன செய்தார் என்று நமக்கும் தெரியாது அவருக்கும் தெரியாது, பின்னர் மூன்று மாதங்களுக்கு முன்பு முடித்துவிட்டு பல அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள அறிவிப்புகள் தலையில் வைக்கும் கனகாம்பரம் பூ, மல்லிக பூபோல வெறும் பூ தான், அந்த அறிவிப்புக்கு பயன்கிடையாது. தமிழக முதலமைச்சர் கடந்த நாட்களில் நாட்டிய கற்களை எல்லாம் பெருக்கி எடுத்தால் ஒரு கட்டடமே கட்டலாம், கட்டிடத்தை அவர் கட்டபோவது இல்லை, மே 2க்கு பிறகு அவர் வரமாட்டார் என்பது அவருக்கே தெரியும்.
தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல; விவசாய பயிர்கடன் தள்ளுபடி என்று தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். கடன் தள்ளுபடி என்றால் பணத்தை எடுத்து வைக்க வேண்டும். 12,110 கோடி ரூபாய் எடுத்து வைத்துள்ளீர்களா, கடன் தள்ளுபடிக்கு யாரிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது ரிசர்வ் வங்கியில் பெறப்பட்டுள்ளதா, மத்திய கூட்டுறவு நிர்வாகத்திடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா?
10 ஆண்டுகளாக தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி செய்ததா பா.ஜ.க ஆட்சி செய்ததா என்று தெரியவில்லை, என்னை பொருத்தவரை பா.ஜ.க தான் செய்தது. இ.பி.எஸூம் ஓபிஎஸ்ஸூம் தலையாட்டி பொம்மைகள். மோடி அமித்ஷாவை பார்த்து அல்ல அவர்களது நிழலை பார்த்து அஞ்சுகிறார்கள்.
அதனால் அ.தி.மு.க தொண்டர்களே நீங்கள் கூறுங்கள் தமிழர்களுக்கு விரோதமாக இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பை புறக்கணித்த பா.ஜ.கவுக்கு இன்னும் எப்படி வாக்கு கேட்கிறீர்கள் ? நேற்று இரவே பா.ஜ.கவுடன் கூட்டணி முறிந்துவிட்டது என்று அறிவத்திருந்தால் பாராட்டியிருப்பேன் தமிழருக்கு விரோதமான பா.ஜ.கவோடு எப்படி கூட்டணி வைத்துக்கொள்ள முடிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.