தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் மாநிலம் முழுதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகம், தேர்தலின் கதாநாயகனான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி முன்னணியில் தமிழகம் முழுவதும் தொடர் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தி.மு.க இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.க கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
அதன்படி, சாத்தூர் தொகுதி தி.மு.க கூட்டணி வேட்பாளர் ரகுராமனை ஆதரித்து சாத்தூர் நகர்ப்பகுதியில் வாக்கு சேகரித்த உதயநிதி ஸ்டாலின், எய்ம்ஸ் மருத்துவமனையை கையில் வைத்துக் காட்டியது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என பிரதமர் மோடி கூறி 6 ஆண்டுகள் ஆன பின்னும், அடிக்கல் நாட்டியே 2 ஆண்டுகள் கடந்த பின்னரும் ஒரு பணியும் நடைபெறாதது குறித்து கடும் அதிருப்தி நிலவி வருகிறது.
இந்நிலையில் சாத்தூரில் வாக்கு சேகரித்த உதயநிதி ஸ்டாலின், “அ.தி.மு.க-பா.ஜ.க இணைந்து மதுரையில் கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை கையொடு எடுத்துவந்துள்ளேன்” எனக் கூறி ஒரு செங்கலை காட்டினார். இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.