திமுக அரசு

“மோடி மஸ்தான் வேலைகள் தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது”: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

காவிரி உரிமையை மத்திய அரசின் ஜல்சக்தி துறையிடம் அடமானம் வைத்திருக்கும் துரோகி தான் முதலமைச்சர் பழனிசாமி என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“மோடி மஸ்தான் வேலைகள் தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது”:  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இன்று (19-03-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, ஒரத்தநாட்டில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“வரும் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு உங்களை எல்லாம் தேடி வந்திருக்கிறேன்.

ஒரத்தநாடு தொகுதி - திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் உங்களால் எம்.ஆர். என்று அன்போடு அழைக்கப்படும் எம்.ராமச்சந்திரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், திருவிடைமருதூர் தொகுதி – கோவி. செழியன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், கும்பகோணம் தொகுதி - அன்பழகன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், திருவையாறு தொகுதி - துரை சந்திரசேகரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், தஞ்சாவூர் தொகுதி – டி.கே.ஜி.நீலமேகம் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், பட்டுக்கோட்டை தொகுதி - அண்ணாதுரை அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், பேராவூரணி தொகுதி - அசோக்குமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், பாபநாசம் தொகுதி - மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் - நம்முடைய மதச்சார்பற்ற கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும் நீங்கள் ஆதரவு தந்து சிறப்பான வெற்றியைத் தேடி தர வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொள்வதற்காக வந்திருக்கிறேன்.

தலைவர் கலைஞர் பிறந்த மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன். கோவிலில் பெரியகோவில் நம்முடைய தஞ்சை கோவில் தான். அணைகளில் சிறந்தது கல்லணை. தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சை. தமிழரின் கோட்டையாக விளங்கி கொண்டிருப்பதும் தஞ்சைதான். எனவே அந்தக் கோட்டைக்கு நான் வந்திருக்கிறேன்.

இந்த தஞ்சை கோட்டையில் தலைவர் கலைஞரின் கால்படாத இடமே இருக்க முடியாது. அப்படிப்பட்ட தலைவர் கலைஞர் அவர்களை முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் டெல்டா விவசாயிகளுக்கு கலைஞர் துரோகம் செய்துவிட்டார் என்று பேசியிருக்கிறார். பழனிசாமி அவர்களே உங்கள் நாக்கு அழுகிப் போய்விடும். யாரைப் பார்த்து அவ்வாறு பேசுகிறீர்கள்?

காவிரி உரிமையை மீட்டுக் கொடுத்து ஐம்பதாண்டு காலம் காப்பாற்றியவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அந்த உரிமையை இப்போது மத்திய அரசின் ஜல்சக்தி துறையிடம் அடமானம் வைத்திருக்கும் துரோகி தான் முதலமைச்சர் பழனிசாமி. அவர் நம்முடைய தலைவர் கலைஞரைப் பார்த்து துரோகம் செய்துவிட்டார் என்று பேசுகிறார். அவர் பேசலாமா?

கலைஞர் அடிக்கடி சொல்வார். நான் பிறந்த ஆண்டு 1924-ஆம் ஆண்டுதான் காவிரி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. 1968-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது, முதலமைச்சராக இருந்த போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதெல்லாம் காவிரி உரிமைக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பது வரலாற்றில் பதிவாகி இருக்கிறது.

“மோடி மஸ்தான் வேலைகள் தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது”:  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

காவிரி நடுவர் மன்றம் அமைக்க 1970-ல் இருந்து போராடி 1990 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைத்தவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அந்த நடுவர் மன்றத்திற்கு இடைக்காலத் தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தை பெற்றுத் தந்தவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் தான். 2007-இல் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு பெற்றுத் தந்தவரும் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் தான்.

2018-ல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இந்த அடியேன் உட்பட நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் முற்போக்கு கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் எல்லாம் சேர்ந்து, முக்கொம்பில் இருந்து கடலூர் வரை காவிரி மீட்புப் பயணம் நடத்தினோம். எனவே கலைஞரைப் பார்த்து தஞ்சை மண்ணுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று பேசுகிறார் என்று சொன்னால் இதை விட கொடுமை எதுவும் இருக்க முடியாது.

மேகதாது அணை கட்ட வேண்டும் என கர்நாடக மாநிலத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பிரதமரைச் சந்தித்து போர்க்கொடி தூக்கினார்கள். ஆனால் தமிழ்நாட்டிற்கு என்ன ஆபத்து என்பதை பற்றி கொஞ்சம் கூட இங்கிருக்கும் ஆட்சி கவலைப்படவில்லை. எனவே காவிரிக் கரையில் பிறந்து, காவேரி மருத்துவமனையில் உயிர் பிரிகிற வகையில் காவிரி உரிமைக்காகப் போராடிய தலைவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். தயவுசெய்து இப்படி எல்லாம் பழனிசாமி பேச கூடாது. அப்படி பேசினால் அவருடைய நாக்கு அழுகித்தான் போகும்.

இன்னொன்றும் பேசியிருக்கிறார் பழனிசாமி. ஒரு விவசாயி ஆள்வது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை என்ற ஒரு கருத்தை பேசியிருக்கிறார். ஆம் எனக்கு விவசாயி என்றால் பிடிக்கும். ஆனால் போலி விவசாயியை எனக்குப் பிடிக்காது. பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு பச்சை துரோகியாக இருக்கும் விவசாயியை பிடிக்காது. உண்மையான விவசாயியாக இருந்தால், மூன்று வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த போது அதை எதிர்த்திருக்க வேண்டும். நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அந்தப் போராட்டத்தில் பங்கேற்று மாண்டு போயிருக்கிறார்கள். இன்றைக்கும் டெல்லியில் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படி போராட்டம் நடத்தியவர்களை பார்த்து, இடைத்தரகர்கள் என்று கொச்சைப்படுத்தி பேசி இருக்கிறார்.

நீங்கள் விவசாயியா? குடிமராமத்தை தூர்வாரும் பணிகள் என்று சொல்லி போலி பில் போட்டு கொள்ளையடித்த பழனிசாமி. விவசாயியா?

நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் நடைபெறாமல் ஊழல் நடைபெற்று கொண்டிருக்கிறது. நீங்கள் விவசாயியா?

விவசாயிகளுக்கான பி.எம். கிசான் திட்டத்தில் ஊழல் நடைபெற்று நாடே தமிழகத்தை ஏளனமாகப் பார்த்து சிரித்தது. நீங்கள் விவசாயியா?

புயலால் பாதிக்கப்படும் போதெல்லாம் விவசாயிகளுக்கு இழப்பீடு தராமல், நேரில் வந்து பார்க்காத பழனிசாமி. நீங்கள் விவசாயியா?

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று சொல்லிவிட்டு நீதிமன்றத்தில் எந்த விதிமுறையும் வகுக்கவில்லை என்று சொன்ன நீங்கள் விவசாயியா?

நீங்க விவசாயி அல்ல, விஷ வாயுதான் என்பதை நான் அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிடுகிறேன்.

இதற்கெல்லாம் முடிவு கட்டுவதுதான் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தல் என்பதை மறந்துவிடக்கூடாது.

“மோடி மஸ்தான் வேலைகள் தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது”:  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

திராவிட முன்னேற்றக் கழகம் தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. கலைஞர் அவர்கள் ஐந்து முறை முதலமைச்சராக இருந்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் தேர்தலை சந்தித்த நேரத்தில் அவர் தந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்களை தீட்டி சாதனைகளை படைத்தவர் தான் தலைவர் கலைஞர் அவர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஒவ்வொருமுறையும் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறபோதும், “சொன்னதைச் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம்” என்பதைத் தலைப்புச் செய்தியாகச் சொல்வார் தலைவர் கலைஞர். எனவே அப்படிப்பட்ட தலைவருடைய மகனாக இருக்கும் ஸ்டாலினும் அதே அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறேன்.

கலைஞர் அவர்கள் 13 வயதில் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவனாக இதே திருவாரூர் தெற்கு வீதியில் மாணவர்களை ஒன்றுகூட்டி திணிக்கப்படும் இந்தியை எதிர்த்து, “ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள். நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இது அல்லவே” என்று போர்ப்பரணி பாடிய தலைவரின் மகன் தான் ஸ்டாலின். நான் 50 ஆண்டுகால வரலாற்றைப் பெற்றவன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டனாக - இளைஞரணி செயலாளராக - சட்டமன்ற உறுப்பினராக - மேயராக - துணைப் பொதுச் செயலாளராக - பொருளாளராக - செயல் தலைவராக - தலைவர் கலைஞருடைய மறைவிற்குப் பிறகு இன்றைக்கு தலைவனாக உங்களையெல்லாம் நான் சந்திக்க வந்திருக்கிறேன். இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால் முதலமைச்சர் வேட்பாளர் என்கிற முறையில் வந்திருக்கிறேன். இவர்கள் வெற்றி பெற்றால் தான் நான் முதலமைச்சர். அதை மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். அதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறோம். விவசாயிகள் நன்மைக்காக பல்வேறு உறுதிமொழிகள் தரப்பட்டிருக்கிறது.

விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட 3 விவசாய சட்டங்களை திரும்ப பெற தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்படும், வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் உருவாக்கப்படும். மீண்டும் உழவர் சந்தை பல்வேறு வகைகளில் செயல்படுத்தப்பட்டு அமைக்கப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 2500 - கரும்பு டன்னுக்கு ரூபாய் 4,000 வழங்கப்படும். அனைத்து உணவுப் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை. இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த வேளாண்துறையில் தனிப்பிரிவு. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆய்வு மையம். மின் இணைப்புக் கோரும் விவசாயிகள் அனைவருக்கும் தடையின்றி இலவச மும்முனை மின் இணைப்பு வழங்கப்படும்.

தலைவர் கலைஞர் அவர்கள் 2006-ஆம் ஆண்டு முதலமைச்சராக வருவதற்கு முன்பு தேர்தல் நேரத்தில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியிருக்கும் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று ஒரு உறுதிமொழி தந்தார்கள். ஆட்சிக்கு வந்து, பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட அதே மேடையில் 7000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி என்று கையெழுத்திட்டார். அதே வழிநின்று நானும் கடந்த பொங்கல் திருநாளுக்கு முதல் நாள் போகிப் பண்டிகையன்று திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில், “தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக் கடனை தள்ளுபடி செய்வோம்” என்று அறிவித்தேன்.

“மோடி மஸ்தான் வேலைகள் தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது”:  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

உடனே முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் இப்போது அறிவித்திருக்கிறார். பத்தாண்டு காலம் அவருக்கு இந்த புத்தி வரவில்லை. பலமுறை விவசாயிகள் போராடினார்கள். சட்டமன்றத்தில் பலமுறை நாங்கள் கோரிக்கை வைத்தோம். விவசாயிகள் அதற்காக போராட்டம் நடத்தினார்கள். ஏன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். உயர்நீதிமன்றமே அதைத் தள்ளுபடி செய்யுங்கள் என்று தீர்ப்பு சொன்னார்கள். ஆனால் அந்த உத்தரவை இந்த அரசு ஏற்றுக் கொள்ளாமல், உச்சநீதிமன்றத்திற்கு சென்று தடை வாங்கினார்கள்.

அவ்வாறு தடை வாங்கிவிட்டு, இப்போது தேர்தல் வரும் காரணத்தால் அவர் அறிவித்திருக்கிறார். நம் தேர்தல் அறிக்கையை நகல் எடுத்தது போல அவர்கள் தேர்தல் அறிக்கை இருக்கிறது. அதனால் நான் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியிருக்கும் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். அதேபோல கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும். இது புதிய அறிவிப்பு அல்ல. ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டோம்.

அதைக்கூட முதலமைச்சர், “தி.மு.க தவறான - பொய்யான வாக்குறுதிகளை சொல்லி, மக்களுக்கு மிட்டாய் கொடுப்பது போல கொடுத்து ஏமாற்றி விட்டார்கள் என்று சொன்னார். சரி… நாங்கள் தான் மிட்டாய் கொடுத்து ஏமாற்றினோம். இப்போது நீங்கள் அறிவித்திருக்கிறீர்களே. நீங்கள் என்ன மிட்டாயா? அல்வாவா? எதைக் கொடுத்து ஏமாற்றப்போகிறீர்கள்?

அதேபோல பெண்களுடைய நலன் காப்பதில் கலைஞருடைய ஆட்சி எப்படி எல்லாம் செயல்பட்டிருக்கிறது? என்னென்ன திட்டங்கள் எல்லாம் செய்திருக்கிறது? என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடு இப்படி பெண்களின் முன்னேற்றத்தை அடிப்படையாக வைத்து கலைஞர் ஆட்சி நடத்தினார்.

அவர் வழியில் அமைய இருக்கும் தி.மு.க அரசு செயல்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் பெண்களுக்காகப் பல திட்டங்களை அறிவித்திருக்கிறோம். குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும், அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு 30 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற மகளிர் சுய உதவி குழுக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

விலைவாசியை குறைக்க பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும், சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைக்கப்படும், பால் விலை லிட்டருக்கு 3 குறைக்கப்படும். மாணவர்கள் மற்றும் இளைஞர் நலன் அடிப்படையாக வைத்து அவர்கள் பெற்ற கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும்.

கொரோனா எனும் கொடிய நோய்த் தொற்றால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவர்களுக்கு 5,000 ரூபாய் உதவித்தொகை கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தேன். ஆனால் வெறும் 1,000 ரூபாய் கொடுத்தார்கள். அதனால் தான் நம்முடைய தேர்தல் அறிக்கையில், மீதமிருக்கும் 4,000 ரூபாயை உடனடியாக வழங்குவோம் என்று உறுதிமொழி தந்திருக்கிறோம், மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும் இப்படி பொதுவாக மக்களுடைய நலனைக் கருதி பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கிறது.

“மோடி மஸ்தான் வேலைகள் தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது”:  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில், கும்பகோணம் - பட்டுக்கோட்டை - ஒரத்தநாடு - மதுக்கூர் - பேராவூரணி அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்பட்டு தரம் உயர்த்தப்படும். தஞ்சாவூர் அரசு மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். தஞ்சாவூரில் இயற்கை விவசாய மையம் உருவாக்கப்படும். திருவோணத்திலும், ஒரத்தநாடு - சாமிபட்டியிலும் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும். ஒரத்தநாடு – சாமிபட்டியில், வடசேரியில் நெல் கொள்முதல் மையங்கள். பேராவூரணியில் தொழிற்பேட்டை - அரசு பொறியியல் கல்லூரி. தஞ்சை மாவட்டத்தின் அனைத்து ஆறுகளின் குறுக்கேயும் தேவையான இடங்களில் தடுப்பணைகள். கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்படும். திருவையாற்றில் வாழை இலை ஏலச் சந்தை மற்றும் வெற்றிலை ஏலச் சந்தை. ஒரத்தநாட்டில் தொழிற்பேட்டை. மல்லிப்பட்டினத்தில் சிட்கோ தொழிற்பேட்டை. கும்பகோணத்தில் ஜவுளிப் பூங்கா. தஞ்சாவூரில் வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி மையம் அமைக்கப்படும். பாபநாசத்தில் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும். மாமன்னன் இராஜராஜசோழன் உடல் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் உள்ள உடையாளூரில் நினைவு மண்டபம் அமைக்கப்படும். தஞ்சை மாவட்டத்தில் உற்பத்தியான நெல் முழுவதும் விவசாயிகளிடமிருந்து உடனுக்குடன் தாமதமில்லாமல் கொள்முதல் செய்யப்படும்.

கூட்டுறவு சங்கங்களில் உண்மையான விவசாயிகள் யாராக இருந்தாலும் அவர்கள் அத்தனை பேரும் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்ற உறுதி மொழிகள் எல்லாம் இங்கே வழங்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே நாம் திருச்சியில் கடந்த 7ஆம் தேதி அன்று ஒரு மிகப்பெரிய பிரம்மாண்டமான கூட்டத்தை நடத்தினோம். அந்த கூட்டத்தில் பத்தாண்டு காலத்திற்கான ஒரு தொலைநோக்கு திட்டத்தில் 7 உறுதிமொழிகளை நான் வழங்கியிருக்கிறேன். அதை நிறைவேற்றுவேன். அதற்கு நான் பொறுப்பு என்று நான் கூறினேன்.

தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, நீட்டை திணித்து மதவெறியைத் தூண்டும் அவர்களுக்கு நான் சொல்வது இது பெரியார் - அண்ணா - கலைஞர் பிறந்த மண். பெரியாரும் - அண்ணாவும் - கலைஞரும் பண்படுத்திய மண். இங்கே உங்களுடைய மோடி மஸ்தான் வேலைகள் நிச்சயமாக எடுபடாது.

இந்தத் தேர்தல், ஏதோ நாம் ஆட்சிக்கு வருவதற்காக நடக்கும் தேர்தல் அல்ல. இது நம்முடைய சுய மரியாதையை காப்பாற்றுவதற்காக நடக்கும் தேர்தல் என்பதை மறந்து விடாதீர்கள்.

அதற்கு உதயசூரியன் சின்னத்திலும் - நம்முடைய கூட்டணி கட்சிகளின் சின்னங்களிலும் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை நீங்கள் தேடித் தர வேண்டும். அதற்கு உங்களது வாக்குகளை எல்லாம் மறந்து விடாமல் சிந்தாமல் சிதறாமல் மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களுக்கு அளித்து ஆதரவு தரவேண்டும்.

விவசாயிகளின் வாழ்க்கை செழிக்க வேண்டும் என்றால், மாநில உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றால். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்றால், நாம் இழந்த உரிமைகளை மீட்க வேண்டும் என்றால், அடிமையாக இருக்கும் இந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்றால், உதயசூரியன் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்களின் சின்னங்களுக்கு வாக்களியுங்கள் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

தலைவர் கலைஞர் அவர்கள் பிறந்த மண் இந்த மண். அந்தத் தலைவர் கலைஞர் அவர்கள் மறைந்து நம்மையெல்லாம் விட்டு பிரிந்து அண்ணனுக்கு பக்கத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். நாம் பெறும் வெற்றியை அவருடைய நினைவிடத்துக்கு சென்று வெற்றி மாலையாக சூட்ட வேண்டும். அதுதான் நாம் கலைஞருக்குச் செய்யும் உண்மையான மரியாதையாக இருக்க முடியும்.

எனவே அந்த வெற்றியை பெற்றுத்தருவதற்கு நீங்கள் எல்லாம் தயாராக இருக்க வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories