தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சி செய்த கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் பின்னோக்கிச் சென்றுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு தொடர்ந்து எதிராகச் செயல்பட்டு வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, இந்தி திணிப்பு, மாநில உரிமைகள் மறுப்பு என தொடர்ந்து தமிழக நலனுக்கு எதிராகச் செயல்படும் மோடி அரசை கேள்வி எதுவும் கேட்காமல் ஆதரித்து வந்தது அ.தி.மு.க அரசு.
மத்திய - மாநில அரசின் இத்தகைய நடவடிக்கைகளை தி.மு.க வலிமையாக எதிர்த்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க மற்றும் மத்திய பா.ஜ.க அரசிற்கு எதிராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை உருவாக்கி வழிநடத்தி வருகிறார்.
இந்நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தயாராகியுள்ளது.
இந்தக் கூட்டணியில் ம.தி.மு.க, வி.சி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.ம.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொ.ம.தே.க, அ.இ.ஃபார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தி.மு.கவின் தேர்தல் அறிக்கை பல்வேறு தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. அதேவேளையில் மாநிலம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பத்திரிகைகள் நடத்திய கருத்துக் கணிப்பிலும் தி.மு.கவிற்கு ஆதரவு குவிந்து வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று ABP- சி வோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் பெரும்பான்மையினர் தி.மு.கவிற்கு வாக்களிப்போம் எனக் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக வெளியான ABP- சி வோட்டர் கருத்துக்கணிப்பில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி 43% வாக்குகளைப் பெறும். அதேபோல், 161 முதல் 169 இடங்களை பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது. அதற்கு அடுத்ததாக அதிமுக 30.6% வாக்குகள் பெற்றும் 53 முதல் 61 இடங்களை பிடிக்கும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் அடுத்த முதலமைச்சராக யார் வர வேண்டும் என விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு 40% மக்கள், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர். எடப்பாடிக்கு 29.7 சதவிதம் பேர் வாக்களித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது, 43% பேர் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் மக்கள் சந்திக்கும் பிரதான பிரச்னை எது என்ற கேள்விக்கு 32.8% பேர் வேலைவாய்ப்பின்மை என்றும், 11.6 % குடிநீர் பிரச்னை என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்னை 10.4% என்றும் தெரிவித்துள்ளார்.