தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தயாராகியுள்ளது.
தி.மு.க கூட்டணியில் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சிக்கு உசிலம்பட்டி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி தலைவர் பி.வி.கதிரவன் பேசுகையில், “தமிழகத்தில் அனைத்து துறைகளும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. அ.தி.மு.க அரசு தமிழகத்தை கடனில் மூழ்கடித்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற வேண்டியது தமிழகத்திற்கு அவசியமானதகும். அதனடிப்படையில்தான் நாங்களும் தி.மு.க கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறோம்.
தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க அரசு, அம்மா ஆட்சியை நடத்துகிறோம் என்கிறார்கள். ஆனால், ஜெயலலிதா எதிர்த்த நீட் தேர்வை தமிழகத்திற்குள் அனுமதித்துள்ளார்கள்.
இட ஒதுக்கீட்டில் ஏன் இவ்வளவு அவசரமாக அறிவிப்பை வெளியிடவேண்டும்? எங்களது கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை. அ.தி.மு.க, பா.ஜ.க-வுக்கு மட்டுமல்லாமல் பா.ம.க-வுக்கும் அடிமையாக இருப்பது மன வருத்தத்தை அளிக்கிறது” எனப் பேசியுள்ளார்.