திமுக அரசு

“முன் தேதியிட்டு பணி ஆணை வழங்கிவரும் அ.தி.மு.க அரசு” - தேர்தல் விதிமீறல் பற்றி புகாரளித்த ஆர்.எஸ்.பாரதி!

"தபால் வாக்கு விவகாரத்தை குளறுபடி இல்லாமல் செயல்படுத்த வேண்டும்.” என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

“முன் தேதியிட்டு பணி ஆணை வழங்கிவரும் அ.தி.மு.க அரசு” - தேர்தல் விதிமீறல் பற்றி புகாரளித்த ஆர்.எஸ்.பாரதி!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு விவகாரத்தை குளறுபடி இல்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்த வேண்டும் என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தமிழகத்திலுள்ள அங்கிகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில்,

"கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது 550 கோடி ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் சி.பி.ஐ வழக்கு விசாரணைக்கு சென்ற நிலையிலும் இதுவரை முடிவு தெரியவில்லை. ஆர்.கே.நகரில் நடைபெற்ற தேர்தலில் 89 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் இதுவரை எந்த முடிவும் வெளிவரவில்லை.

80 வயது மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு விருப்பத்தின் பேரில் அளிக்கப்படும் என்ற விவகாரத்தில் குளறுபடி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளித்து அதன் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதனால் அவற்றில் உள்ள குளறுபடிகளை கலைந்து வெளிப்படைத்தன்மையை அதில் உள்ள தவறுகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தி.மு.கவைப் பொறுத்தவரை 80 வயது மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு தேவை இல்லை என்பதுதான் நிலைப்பாடு. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர இருக்கிறோம்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் தபால் வாக்கு எண்ணப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தற்போது வரை நிலுவையில் இருக்கிறது. எனவே தபால் வாக்கு விவகாரத்தை குளறுபடி இல்லாமல் செயல்படுத்த வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

மேலும், தேர்தல் ஆணையத்திடம் அளித்த பல்வேறு புகார்கள் குறித்து அவற்றின் மீதான நடவடிக்கை குறித்து கேள்வி கேட்டதற்கு உயரதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையர் தெரிவித்ததாகவும் எனினும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை என தெரிவித்தார்.

தமிழக அரசின் பல்வேறு அரசு அலுவலகங்களில் ஆளுங்கட்சியினர் 5 லட்சத்திலிருந்து பத்து லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டு அலுவலக உதவியாளர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்துள்ளதாகவும் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசு அதிகாரிகளிடம் முன் தேதியிட்டு அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு வருவதாகவும் அவற்றை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.

தேர்தலில் செயல்படுத்த முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அறிவிக்கும் பட்சத்தில் அவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். தேர்தல் தேதி அறிவித்த நிலையிலும் தமிழக ஆளுநர் தமிழக அரசின் செயல்படுத்த முடியாத அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியது தேர்தல் விதிமுறை மீறல் எனவும் தெரிவித்தார்.

5 மாநிலங்களில் மட்டுமே சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வாக்குப் பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மாத காலம் அவகாசம் தேவையற்றது எனவும் வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பதும் கண்காணிப்பதும் கடினம் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, ஒரு மாவட்டத்தில் பல்வேறு சட்டமன்றத் தொகுதிகள் இருக்கும் நிலையில் அவற்றில் நடைபெறக்கூடிய வாக்குகளை எல்லாம் ஒரு இடத்தில் வைத்து வாக்கு எண்ணுவது சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாகவும், கொரோனா காலத்தில் ஒரே இடத்தில் கூட்டம் அதிகமாக கூடுவதை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories