நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று (ஜூன் 4) நடைபெற்ற நிலையில், இதில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளது. இந்த சூழலில் பாஜக தனித்து 240 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், அதற்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஆட்சியை பிடிக்கும் நிர்பந்தத்தில் பாஜக உள்ளது.
இந்த சூழலில் இந்தியா கூட்டணி சந்திரபாபு நாயுடு மற்றும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிகிறது. அந்த இரண்டு முதல்வர்களும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தால், பெரும்பான்மை பெற்று இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும். எனினும் அந்த இரண்டு கட்சிகளும் பாஜக கூட்டணியில் உள்ளது.
தற்போது அந்த இரண்டு கட்சிகளின் துணை இல்லாமல் பாஜகவால் ஆட்சியமைக்க இயலாத நிலையில், தற்போது அந்த கட்சிகள் பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பீகார் மற்றும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்றும், முக்கிய அமைச்சர்கள் பதவி தங்களுக்கு வேண்டும் என்றும், சபாநாயகர் பதவியும் தங்களுக்கே வேண்டும் என்றும் இரண்டு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
இரண்டு கட்சி தலைவர்களும் பலத்த கோரிக்கைகள் வைப்பதால் பாஜக தற்போது விழிபிதுங்கி நிற்கின்றது. ஏனென்றால், கடந்த 2 முறையும் பாஜக பெரும்பான்மையை பிடித்து சபாநாயகரை பாஜகவே தேர்ந்தெடுத்து வந்த சூழலில், முக்கியமானவையை கூட்டணி கட்சிகள் கேட்கிறது. இதனால் பாஜகவும் மோடியும் பெரும் சிக்கலில் இருக்கிறது.