நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகால பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்துதுவதற்காக 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ’இந்தியா’ கூட்டணியை உருவாக்கி தேர்தளில் களம் கண்டுள்ளனர். இதுவரை இப்படி எதிர்க்கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது கிடையாது. இதனால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதியோடு நிறைவடைந்த தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா கூட்டணி 236 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது.
தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பில், பாஜக கூட்டணி 350 முதல் 371 இடங்களுக்கும் மேல் வெற்றி பெரும் பல கருத்துக் கணிப்புகள் தெரிவித்து இருந்தது.
தற்போது வாக்கு எண்ணிக்கை முடிவுகள் கருத்து கணிப்புகளை பொய்யாக்கி, பா.ஜ.க 290க்கும் குறைவான இடங்களிலேயே முன்னிலையில் இருந்து வருகிறது. அதேபோல் இந்தியா கூட்டணி 150 இடங்கள் கூட தாண்டாது என கூறப்பட்ட நிலையில், 230 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது.
தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், கேரளா, ராஜஸ்தான், பீகார், பஞ்சாப், உத்தர பிரதேசம், ஹரியானா, தெலங்கானா, ஜம்மு - காஷ்மீர், மணிப்பூர் ஆகிய மாநிங்களில் இந்திய கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி முகத்தில் உள்ளனர்.
இந்நிலையில் சி.பி.எம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ”தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு பஞ்குச் சந்தையில் செல்வாக்கு செலுத்தவே நடத்தப்பட்டது. அதன்படியே பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்க நினைத்தவர்கள் பணம் சம்பாதித்தனர். இப்போது உண்மை உங்கள் முன் வந்து கொண்டிருக்கிறது.” என தெரிவித்துள்ளார்.