நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், இன்று (மே 20) 5-ம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனிடையே தேர்தல் பிரசாரத்தில் பாஜகவும், மோடியும் இஸ்லாமியர்கள் குறித்தும் காங்கிரஸ் குறித்தும் தொடர்ந்து அவதூறு பரப்பி வெறுப்பு பேச்சையும் பேசி வருகின்றனர்.
மேலும் வாக்குப்பதிவு நடைபெறும் சமயத்தில் பாஜக தனது எல்லைகளை மீறியும் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் மே 13-ம் தேதி நடைபெற்ற 4-ம் கட்ட தேர்தலின்போது, உத்தர பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் வெவ்வேறு சட்டை அணிந்துகொண்டு பாஜகவுக்கு 8 முறை கள்ள ஓட்டு போட்டு, அதனை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டுள்ளார். இதையடுத்து தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பாஜக நிர்வாகியின் மகன் என்று தெரியவந்துள்ளது.
கடந்த மே 13-ம் தேதி 4-ம் கட்டமாக 96 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த சூழலில் உத்தர பிரதேசத்தின் ஃபரூக்காபாத் தொகுதிக்குட்பட்ட எடா மாவட்டத்தின் கிரி பமரன் (Khiri Pamaran) என்ற கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில், இளம் வயது நபர் ஒருவர் புகுந்துள்ளார். அப்போது அங்கிருந்த வாக்காளர்களை மிரட்டி, அவர்களது அடையாள அட்டைகளை பெற்று உள்ளே சென்று வாக்களித்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் வாக்களிக்கும்போது, அதனை வீடியோவாக எடுத்து அவரே வெளியிட்டுள்ளார். வாக்குப்பதிவு நடந்து முடிந்து 1 வாரத்திற்கு பிறகு இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், கள்ள ஓட்டு போட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து விசாரிக்கையில் அந்த நபர் பாஜக நிர்வாகியின் மகன் என்று தெரியவந்துள்ளது. கள்ள ஓட்டு போட்ட நபர், கிரி பமரன் கிராம ஊராட்சி தலைவராக இருக்கும் அனில் சிங் தாகூரின் மகன் ராஜன் சிங் தாகூர் என்றும், அவருக்கு வயது வெறும் 16 என்றும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அந்த நபர் வாக்காளர்களை மிரட்டி அவர்கள் அடையாள அட்டையை பிடிங்கு வாக்களித்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக நிர்வாகி அனில் சிங் கூறுகையில், "என் மகன் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்பு வாக்கு இயந்திரத்தை சோதனை செய்தபோது வீடியோ எடுக்கப்பட்டது." என்று தெரிவித்தார். மேலும் உடல்நல பிரச்னை உள்ளவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர் உதவி செய்ததாகவும், அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சிறுவனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் நடந்த வாக்குச்சாவடிக்கு மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.