நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், 4 கட்டங்கள் நிறைவடைந்துவிட்டன. நாளை (மே 20) 5-ம் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மே 25-ம் தேதி 6-ம் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை 5-ம் கட்ட தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மீதமிருக்கும் தொகுதிகளில் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி கூட்டணியாக போட்டியிடுகிறது. இதனால் உ.பி பிரசாரத்தின்போது ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் கூட்டாக சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி உபி-யில் உள்ள பிரயாக்ராஜ் அருகே அமைந்துள்ள புல்பூர் மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் கூட்டாக சேர்ந்து பிரசாரம் மேற்கொண்டனர்.
அப்போது அங்கே சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூட்டமாக அணிதிரண்டனர். ஒவ்வொருவர் கையிலும் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளின் கொடியோடு, அம்பேத்கரின் புகைப்படம் பொறித்த பதாகையும் இருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் முழக்கங்களை எழுப்பினர். ஒரு கட்டத்தில் மக்கள் அனைவரும் ராகுல் மற்றும் அகிலேஷை காண தடுப்புகளை தாண்டி மேடை நோக்கி படையெடுத்தனர்.
இதனால் ராகுல் காந்தி தனது உரையை விரைவாக முடிக்க நேர்ந்தது. எனினும் அரசியலமைப்பை பாதுகாக்க மக்கள் தங்கள் குரல்களை ஓங்கி ஒலிக்க துவங்கிவிட்டது இதன் மூலம் தெரிகிறது. மக்களுக்கு தெற்கு, வடகிழக்கு மட்டுமின்றி, வடக்கேயும் பாஜகவின் போலி விவகாரம் புரிய தொடங்கிவிட்டது. இந்தியா கூட்டணிக்கு மக்கள் ஆதரவு, அதுவும் பாஜக ஆளும் மாநிலமான உ.பியில் கடல் அலைபோல் காட்சியளித்தது.
இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பலரது கருத்துகளையும் பெற்று வருகிறது. இந்தியா கூட்டணிக்கு மக்கள் ஆதரவு பெருகும் நிலையில், மோடி, அமித்ஷா, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பாஜகவினர் விழிபிதுங்கி நிற்கின்றனர்.