பாஜக ஆளாத மாநிலங்களில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை ஏவி அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், முதலமைச்சர்கள் என பலருக்கும் குடைச்சல் கொடுத்து வருகிறது பாஜக. அதோடு ஊழல் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து தொல்லை செய்து வருகிறது. அந்த வகையில் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக அமலாக்கத்துறை பல மாதங்களாக விசாரித்து வந்த நிலையில், இது தொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திராவின் YSR காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஸ்ரீனிவாசலூ ரெட்டியை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியினரை குறிவைத்து பாஜக அடக்கியது. டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை பாஜகவின் பேச்சை கேட்டு கைது செய்தது அமலாக்கத்துறை. இதைத்தொடர்ந்து ஆம் ஆத்மி அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என குறிவைக்கப்பட்டனர்.
இவர்களை தொடர்ந்து டெல்லில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் அமலாக்கத்துறை கைது செய்தது. டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு தொடர்ந்து 9 முறை அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களை, அவர் நிராகரித்து வந்த நிலையில், கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஒரு முதலமைச்சர் பதவியில் இருக்கும்போதே கைது செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தது.
மேலும் தற்போது வரை இது தொடர்பாக ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார். இந்த வழக்கு நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
அதன்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். சுமார் 50 நாட்களுக்கு பிறகு திஹார் சிறையில் இருந்து வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
மேலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அநீதிக்கு எதிரான வெற்றி என பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். குறிப்பாக கெஜ்ரிவால் ஜாமீன் கிடைத்த விவகாரத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “அநீதிக்கு எதிரான இந்த வெற்றி நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறது. கெஜ்ரிவாலுக்கு கிடைத்த ஜாமீன் நீதியின் அடையாளமாக திகழ்வது மட்டுமல்ல, இந்தியா கூட்டணிக்கு மிகுந்த பலத்தை சேர்த்து தேர்தலில் வெற்றிபெறுவதற்கான ஊக்கத்தையும் அளிக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நமது ஜனநாயக வரலாற்றில் குறிப்பிடத்தக்க முன்னுதாரணமாகும். இது நடந்து கொண்டிருக்கும் பொதுத் தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தி, ஜனநாயக சக்திகளின் அமோக வெற்றிக்கு வழிவகுக்கும்.
எதிர்க்கட்சிகளை அடக்குவதன் மூலம் எந்த ஒரு சர்வாதிகார ஆட்சியும் நீண்ட காலம் கோலோச்ச முடியாது என்பதை சட்டத்தின் மூலம் இந்த தீர்ப்பு உணர்த்தியிருக்கிறது. அதிகார மிகுதியால் வகுப்புவாத வெறுப்பை தூண்டி, விசாரணை அமைப்புகளைக் கட்டவிழ்த்துவிட்டு, எதிர்க்கட்சிகளை வேட்டையாடுவதன் மூலம் தேர்தல் ஆதாயங்களைப் பெற முயன்றவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு சம்மட்டியடியாக அமைந்திருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே, "தான் தூங்கவில்லை என்று கூறும் மோடிக்கு உண்மையிலேயே இன்று இரவு தூக்கமே வராது" என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். தொடர்ந்து தலைவர்கள், மக்கள் என பலரும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வரவேற்பு அளித்து வருகின்றனர்.