நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு ஒரு பக்கம் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபக்கம் தேர்தல் அதிகாரிகள் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் என கொடுப்பது சட்ட விரோதம் என்றும், கண்டுபிடிக்கப்பட்டால் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
எனவே தினமும் அனைத்து முக்கிய அரசியல் கட்சி தலைவர்களின் வாகனங்களும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, மக்களும் குறிப்பிட்ட தொகையை எடுத்து செல்லும்போது, அதற்கான ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கூட தாம்பரம் இரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி ரூ.4 கோடி பணத்தை கொண்டு செல்ல முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு செல்லப்பட இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நயினாருக்கு சொந்தமான ஹோட்டேல், வீடு, அவரது நண்பர்களின் வீடு உள்ளிட்டவையில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் வேட்டி, நைட்டி, மது பாட்டில்கள், கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 72 ஆயிரம் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதிமுக பிரமுகர் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி சாலையில் உள்ள லாரி உரிமையாளர் செல்லப்பன். இவரது வீட்டில் பறக்கும் படையினர், வருமான வரித்துறையினர் இன்று சோதனை செய்தனர்.
அப்போது இவரது வீட்டிலிருந்து ரூ.80 லட்சம் கண்டறிந்தனர். இதுகுறித்து விசாரித்தபோது, அதற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து இதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணம் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யப்பட இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.