நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா, பரிசு பொருட்கள் உள்ளிட்ட எதையும் வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறி யாரேனும் செயல்பட்டால், அவர்கள் மீது தக்க நடவடிக்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தேர்தல் அதிகாரிகள், போலீசார், கண்காணிப்பு நிலைக்குழுவினர் என அனைவரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஈரோடு கோபிசெட்டிபாளையம் பகுதியிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில் நேற்று இரவு தாம்பரம் இரயில் நிலையத்தில் இருந்து நெல்லை விரைவு இரயிலில் ரூ.4 கோடி பணத்தை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் என்று தெரியவந்தது.
மேலும் இதில் சதீஷ் என்பவர் பாஜகவின் உறுப்பினராக உள்ளது கண்டறியப்பட்டது. தொடர்ந்து இந்த ரூ.4 கோடி பணத்தை நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுமார் 6 பைகளில் ரூ.500 கட்டு நோட்டுகளுடன் பிடிபட்ட கும்பல் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நெல்லை பாஜக எம்.எல்.ஏ-வும், வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்த நிலையில், நெல்லையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவரது உறவினர்கள், நண்பர்கள் என பலரது வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது வேஷ்டி, சேலை, ரூ.2 லட்சம் ரொக்கம், மது பாட்டில்கள் உள்ளிட்டவையை பறிமுதல் செய்தனர்.
அதாவது திருநெல்வேலி மாநகரம், கணேஷ் மணி என்பவர் வீட்டில் சோதனை செய்து பணம் ரூ.2 லட்சம், நைட்டி, வேஷ்டி, மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது. காலை 11.50 மணி முதல் 12.10 மணி வரை கணேஷ் மணி வீட்டில் சோதனை நடத்தியதில், பணம் ரூ.2 லட்சம், வேஷ்டி - 100, நைட்டி - 44, ஃபுல் பாட்டில்- 25, டின் பீர்- 16 ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.
தொடர்ந்து வண்ணார்பேட்டை லட்சுமி காயத்ரி ஹோட்டல் உரிமையாளர் குணசேகரன் (பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உறவினர்) என்பவரது வீட்டில் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 72 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.