தென் சென்னை தொகுதி திமுக வெற்றி வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து கோட்டூர்புரம் சந்தையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
அப்போது வாக்காளர்கள் மத்தியில் செல்வப் பெருந்தகை பேசியதாவது, “எதைச் சொல்லி வாக்கு கேட்கப் போகிறார்கள் பாஜகவும் அதிமுகவும். விரோதியும் துரோகியும் தனித்தனியாக நிற்கிறார்கள், தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்தவர் மோடி, தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக் கொடுத்தவர் எடப்பாடி. தற்போது இரண்டு பேரும் இரண்டு அணிகளாக நிற்கிறார்கள்.
எடப்பாடியின் அதிமுக, நீட் தேர்வை எதற்காக அனுமதித்தது? மோடியிடம் தமிழ்நாட்டின் உரிமைகளை அடிமை சாசனமாக எழுதி கொடுத்து நான்காண்டுகள் கொள்ளை அடிக்க வேண்டும் என்றே ஆட்சி புரிந்தவர் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாடு என்றாலே மாற்றான் தாய் போக்குடன் பாஜக நடக்கிறது. பாஜகவுக்கு தமிழர்களையும் பிடிக்காது; தமிழ் கலாச்சாரத்தையும் ஏற்றுக் கொள்ளாது.
நம்முடைய தமிழ் இலக்கணமும் இலக்கியமும் அவர்களுக்கு மிகப்பெரிய போட்டி, ஆகையால் நம்மை விரோதத்தனமாக பார்ப்பார்கள். விரோதிகளிடம் இந்த தமிழ்நாட்டை விட்டுக் கொடுத்தது துரோகிகள். இப்போது எதைச் சொல்லி இவர்கள் வாக்கு கேட்கப் போகிறார்கள். 2 கோடி பேருக்கு இருந்த வேலைவாய்ப்பையும் அழித்துவிட்டார் மோடி.
உலக நாடுகளுக்கு இணையாக ராமேஸ்வரம் கோயிலை மாற்றுவேன் என்று கூறிய மோடி, ஒரு கல்லை கூட வைக்கவில்லை. நம்முடைய தமிழ்நாடு அரசு, கோயில்களுக்கு புத்துயிர் கொடுத்துள்ளது. கும்பாபிஷேகங்களை நடத்தி வருகிறது. இந்துக்களை பாதுகாத்து வருகிறது. இராமர் கோயிலை கட்டினால் வடமாநிலங்களில் வாக்கு வந்து விடும் என்று அவசரம் அவசரமாக கட்டினார்கள். ஆனால் இராமரே மன்னிக்காத ஒருவர் என்றால் அது மோடி மட்டுமே. தமிழ்நாட்டில் மக்களுக்கான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் வந்து மோடி பாடம் படித்து விட்டு செல்ல வேண்டும்.
அண்ணாமலை தென் சென்னையில் பேசினால் ஒரு வாய், கோவையில் பேசினால் ஒரு வாய். மாநில ஆட்சிகளுக்கு எதிராக அராஜகங்களை தெலங்கானா மற்றும் புதுச்சேரியில் தமிழிசை சௌந்தரராஜன் செய்தார். அராஜகத்தின் உச்சத்தின் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். உண்மைக்கு புறம்பாக மட்டுமே பாஜகவினர் பேசுவார்கள்
இதுவரை கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றாவது மோடி நிறைவேற்றி உள்ளாரா? முக கவசங்களை கூட சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய சூழல்தான் பெருந்தொற்று காலத்தில் இருந்தது. மோடியும் அண்ணாமலையும் வாருங்கள், ஒன்றுக்கொன்று நேரடியாக வாதம் செய்வோம். பாஜக ஆட்சிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தொடர்ந்து குட்டு வைத்துக் கொண்டிருக்கிறது.
உள்நாட்டிலும் துரோகம், வெளிநாடுகளும் சந்தி சிரிக்கிறது, கேலி பேசுகிறார்கள் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று மோடி தலைகுனிந்து நிற்கிறார். கடந்த பத்தாண்டுகளில் கஜானாவை கொள்ளை அடித்து சென்று விட்டனர் அதிமுகவினர். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்கிறார்.
ஒரு ரோல் மாடல் முதலமைச்சர், சிறப்பாக செயல்பட்டு இந்தியாவிற்கு வழிகாட்டி கொண்டு இருக்கிறார். மோடியும், அண்ணாமலையும், எடப்பாடியும் அவர்கள் ஆட்சியில் என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தார்கள் என்று மேடை போட்டு சொல்ல வேண்டும். 17 தேர்தல்களை நம் நாடு சந்தித்துள்ளது. இந்த தேர்தல் என்பது 18-வது நாடாளுமன்ற தேர்தல், இந்த தேர்தல் இந்த தேசத்தை பாதுகாக்க கூடிய தேர்தல். இது இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு சந்திக்கும் மிக மிக முக்கியமான தேர்தல்" என்றார்.