தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ஆம் நாளை ஆண்டுதோறும் 'சமூகநீதி நாள்' ஆகக் கொண்டாடுவோம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி 110-ன்கீழ் அறிவித்துள்ளார்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பாராட்டு மழையை பொழிந்து வருகிறார்கள்.
அவ்வகையில், சட்டப்பேரவையில் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை, தாடியில்லா தடியில்லா பெரியாராக நமது முதலமைச்சர் இருக்கிறார்.
தமிழ்நாடு நலம் பெற வேண்டும் என்றால் தமிழக மக்கள் முதல்வரின் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள் தமிழ்நாடு ஓங்கி நிற்கும். பார் போற்றும் பரவச அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது என புகழ்பாடியுள்ளார்.
சமூக நீதியின் கதவை கைத்தடியால் தட்டினார் என்பவரின் முதல்வர் வார்த்தை மிகப்பெரிய அறிவிப்பாக நான் பார்க்கிறேன். தமிழ்நாடு சமூக நீதியின் கோட்டையாக விளங்கும். தமிழரின் ஒவ்வொரு உணர்வும் தந்தை பெரியாரின் உணர்வாக மாறக்கூடிய அறிவிப்பாக உள்ளது என மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
தந்தை பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அனைவரிடமும் கொண்டு செல்லும் வகையில் அரசு அலுவலகங்களில் உறுதி மொழி எடுத்து கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பை மனதார பாராட்டுவதாக பாமகவின் ஜி.கே.மணி தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து முதலமைச்சரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து அறிக்கையாக வெளியிட்டுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த இந்த ஆட்சி மகுடம் - மாணிக்கக் கற்கள் பொருத்தப்பட்ட ஒளிவீசும் மகுடமாக சமூகநீதி பிரகடனத்தைச் செய்துள்ளது.
இது காலம் காலமாக நின்று பேசும் வரலாற்றுக் கல்வெட்டாக, சிலாசாசனமாக ஒளிவீசப் போகிறது, போகிறது! நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனி என்றும் ‘சமூக நீதிக்கான சரித்திர நாயகர்’ என்றழைக்கப்பட வேண்டியது - வரலாற்றின், காலத்தின் கட்டளை! எனக் கூறிப்பிட்டுள்ளார்.