தி.மு.க

“இனி தமிழகம் வெல்லும்” இது வெறும் சொல்லாடல் அல்ல; புதிய தமிழகத்தின் வெளிப்பாடு! - சிலந்தி கட்டுரை!

“வெல்லட்டும் தமிழகம்” என்ற தலைப்பில் முரசொலி நாளேட்டில் சிலந்தியின் கவிதை வடிவிலான கட்டுரை வெளியிட்டப்பட்டுள்ளது.

“இனி தமிழகம் வெல்லும்” இது வெறும் சொல்லாடல் அல்ல; புதிய தமிழகத்தின் வெளிப்பாடு! - சிலந்தி கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"பாருங்கள் பாருங்கள் - மக்களே!

பல கோடி வாழ்த்துக்கள் கூறுங்களே!

ஆருயிர்மேல் நம் தலைவரை - வாழ்த்தி

ஆடுங்கள் பாடுங்கள் தோழர்களே"

-என பெருங்கவிக்கோவும்,

பாயும் புலியென தளபதியார் - கடும் பகையை

அழித்திட்டார்...

கும்மி அடி

அண்ணா பெயரைச் சொல்லி சொல்லி

ஆயிரம் கையால்

கும்மி அடி

கண்ணார் கலைஞரைச்

சொல்லிச் சொல்லி

கைவளை குலுங்கக் கும்மி அடி

திண்ணார் பெரியாரைச் சொல்லிச் சொல்லி

செங்கை சிவக்கக் கும்மி அடி

எண்ணேர் தொண்டர்

எழுச்சி சொல்லி இளங்கை

கொட்டி கும்மி அடி

என பேராசிரியர் மா. செல்வராசனும் முரசொலியில் எழுதிய கவிதைகள் கவிதைகள் மட்டுமல்ல; பல கோடி தமிழ் நெஞ்சங்களின் எண்ண அலைகள்!

நடைபெற்ற தேர்தல்; வழக்கமாக வந்து போன தேர்தல் அல்ல. அடுத்த ஆட்சி யார் அமைப்பது என்பதற்கு அமைக்கப்பட்ட களம் மட்டுமல்ல; சில நாசகாரர்கள், நயவஞ்சக எண்ணத்தோடு, திட்டமிட்டு நசுக்கிட நினைத்த ஓர் இன எழுச்சியை மீட்டெடுத்த வாக்குப்போர்; ஆம் அது ஒரு இனமானப் போர்!

கூனிக்குறுகிக் கிடந்த இனத்தை நிமிர்த்திட,

நெஞ்சுயர்த்த வைத்து, நமக்கு நம்மையே அடையாளம் காட்டிய

திராவிடத் தலைவர்களின் எண்ணங்களையும்,

தியாகங்களையும் பட்டுப் போகவிடமாட்டோம்

எனப் பறைசாற்றி கிளர்ந்தெழுந்து சந்தித்த பெரும் யுத்தம்;

அந்த யுத்த களத்தில்

ஒத்த கருத்துடையவர்களையெல்லாம் அரவணைத்து

படை நடத்தி, எதிரிகளின்

வியூகங்களை சுக்கு நூறாக்கி நம்மை

வெற்றி முகட்டிற்கே

இட்டுச் சென்றுள்ள

தலைவர் தளபதியின் உழைப்பு

பலரையும் பிரமிக்க வைத்த உழைப்பு!

களத்தில் நாம் எதிர்கொண்ட எதிரிகள் சர்வ வல்லமை பெற்றவர்கள்; சாணக்கியத் தனத்தில் உச்சத்தைத் தொட்ட கூட்டமும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது. திராவிட இயக்கத்தை அழிக்காமல் ஓயமாட்டோம் எனும் போக்கில் சிண்டை அவிழ்த்து விட்டுத் திரிந்த கூட்டம் ஒன்று இவர்களுக்கு பக்கபலமாக வெறிக்கூத்தாடியது!

நம் வாக்குகளை சிதறடிக்க சில்லறைகளை இறைத்து சில சில்லறைகளைப் பிடித்து நமக்கு எதிராக களத்தில் இறக்கினர். நரிகள் தங்களை பரிகளாகக் காட்டிக் கொண்டு ஆட்டம் காட்டின. அத்தனை எதிரிகளையும் புரட்டி எறிந்துவிட்டு வெற்றிக்கொடியை உயரப்பறக்க விட்டிருக்கிறது. தலைவர் தளபதி தலைமையில் களம் கண்ட கழக அணி!

ஆனால் இந்த வெற்றியை ஆடிப் பாடியோ கும்மியடித்து குதுகலித்தோ கொண்டாட முடியவில்லை. நெறிகெட்ட முந்தைய ஆட்சியாளர் நடத்திய முறைகெட்ட ஆட்சியால் பரவிவிட்ட பெரும்தொற்று மக்களை உலுக்கிக் கொண்டிருக்கிறது. திட்டமிட்டு தேட்டைப் போட்டு அரசின் கஜானாவை காலியாக்கி வைத்திருக்கிறது முந்தைய அரசு!

கொரோனாவிற்கு எதிராக கை தட்டி, போர் நடத்திய மோடி அரசு இன்று நிலைமை கைமீறிப் போய்விட்டது கண்டு கையறு நிலையில் பிற நாடுகளை நோக்கி கையேந்தி நிற்கிறது! இப்படிப்பட்ட நேரத்தில் முதலமைச்சர் பொறுப்பு எனும் கிரீடத்தையேற்றிட வேண்டிய தளபதி தலையில் முள் கிரீடம் ஏற்றி வைக்கப்படுகிறது!

தனது அரசியல், பொது வாழ்வில் எதிர்கொண்ட எத்தனையோ பேரிடிகளை தகர்த்து வெற்றி நடைபோட்ட தலைவர் தளபதி இதிலும் வெற்றி கண்டு மக்களுக்கு நிம்மதியை தேடித்தருவார் என உறுதிகொள்வோம்!

இனி தமிழகம் வெல்லும் அதனை நாளைய தமிழகம் சொல்லும் - என தனது நன்றி அறிவிப்பில் தளபதி இரத்தின சுருக்கமாகக் கூறியதே அவரது இலட்சிய பிரகடனமாக வெளிப்படுகிறது!

"இனி தமிழகம் வெல்லும்" இது வெறும் சொல்லாடல் அல்ல; தலைவர் தளபதி காண விரும்பும் எண்ணத்தில் புதிய தமிழகத்தின் வெளிப்பாடு!

தந்தை கலைஞர் வழியில் புதிய தமிழகம் அமைக்க, பெரியார், அண்ணா தந்த அறிவாயுதங்களை ஏந்தி, மக்கள் சக்தி எனும் படையுடன் புறப்பட்டுள்ள தளபதியின் எண்ணம் வென்றிட எல்லோரும் துணை நிற்போம்!

வெல்க தமிழகம்; வெல்க வெல்கவே!

banner

Related Stories

Related Stories