ஒடிசாவின் புரி மாவட்டத்தின் காரடிபிதா கிராமத்தைச் சேர்ந்தவர் லோஜி பெகேரா (20). பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவியான இவர் கடந்த 2019ம் ஆண்டு கட்டிட பொறியியலில் டிப்ளமோ படிப்பை படித்துள்ளார். அதற்கு 24 ஆயிரத்து 500 ரூபாய் நிலுவைத் தொகை கட்ட முடியாத காரணத்தால் டிப்ளமோ முடித்ததற்கான சான்றிதழை அவரால் பெற முடியவில்லை.
அதனையடுத்து, பி.டெக் படிக்க வேண்டும் என ஆர்வம் இருந்தும் குடும்ப வறுமை காரணமாக மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டத்தில் கூலி வேலை செய்து வந்திருக்கிறார். இருப்பினும் தன்னுடைய படிப்புக்காக உதவி செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இதனை சமூக வலைதளங்கள் வாயிலாக அறிந்த தருமபுரி மக்களவைத் தொகுதி தி.மு.க எம்.பி டாக்டர் செந்தில்குமார் மாணவியின் சொந்த ஊருக்கு நேரில் சென்று ரூ.1 லட்சம் நிதியை வழங்கியதோடு, படிப்புச் செலவுக்கான வங்கிக் கடனையும் ஏற்பாடு செய்து தருவதாக உத்தரவாதம் அளித்துள்ளார்.
மாநிலம் விட்டு மாநிலம் சென்று பழங்குடி பெண்ணுக்கு துரிதமாக உதவிய தி.மு.க எம்பி செந்தில்குமாருக்கு அனைவர் மத்தியிலும் பெரும் பாராட்டு குவிந்து வருகிறது.