"அரியலூர் அனிதா துவங்கி நேற்று முன்தினம் மூன்று மாணவக் கண்மணிகளின் உயிரும் அநியாயமாகப் பறிபோனதற்கு அ.தி.மு.க. அரசு போடும் கபட நாடகம்தான் ஒரே காரணம்" என விருதுநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் குறிப்பிட்டுள்ளதன் விவரம்:-
“நீட் தேர்வு விஷயத்தில் தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவுகளைக் காலடியில் போட்டு நசுக்கியதோடு மட்டுமல்லாமல்; அரியலூர் மாணவி அனிதா துவங்கி நேற்று முன்தினம் ஒரே நாளில் மூன்று மாணவக் கண்மணிகளின் உயிர் அநியாயமாகப் பறிபோவதற்கும் தமிழ்நாடு அரசு போடுகின்ற கபட நாடகம்தான் ஒரே காரணம் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் நன்றாகப் புரிந்து வைத்திருக்கின்றார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை நோக்கி விரல் நீட்டிச் சுட்டிக்காட்டும் யோக்கியதை ஏதுமில்லாத அமைச்சர்கள் ஜெயக்குமாரும், விஜயபாஸ்கரும் கிழிந்துவிட்ட தங்கள் முகத்திரையையும், அதில் தெரியும் தங்கள் கோர முகங்களையும் மறைக்க வழிதெரியாமல், கழகத்தின் மீது களங்கம் கற்பிக்க முயன்று கடைந்தெடுத்த பொய்களை அள்ளி வீசி, பேட்டி என்ற பெயரால் இன்றைக்குத் தங்கள் மன எரிச்சலைச் சொறிந்து கொண்டிருக்கிறார்கள்.
கழகம் ஆட்சிப்பொறுப்பில் இருந்த வரை, நீட் தேர்வைத் தமிழகத்தில் நடத்திட அனுமதிக்கவில்லை என்பது மட்டுமல்ல; இதற்கெல்லாம் முன்னோடியாக வந்த நுழைவுத் தேர்வினையும் தமிழக மண்ணிலிருந்து விரட்டியடித்து, தமிழக மாணவர்களின் நலன் காத்த அரசு கழக அரசு என்பதை, தங்கள் அழுக்கைத் துடைக்க வகை இல்லாமல் அடுத்தவர் மிடுக்கைக் கண்டு அடிவயிற்றில் இடித்துக் கொள்ளும் காந்தாரி மனம் கொண்ட சில அமைச்சர்கள் வேண்டுமானால் தெரியாதது போல நடிக்கலாம்; ஆனால், நல்ல மனம் கொண்ட நாட்டு மக்கள், கழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால்தான் தங்கள் பிள்ளைகளின் மருத்துவக் கனவுகளும், பொறியியல் வாய்ப்புகளும் பாதுகாக்கப்பட்டன என்பதை நன்றாகவே அறிவார்கள்.
இத்தனை உயிர்கள் பலியான பின்பும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு உளப்பூர்வமாக எந்த முயற்சியும் செய்யாமல், தேர்தல் கணக்குகளை மாத்திரம் மனதில் கொண்டு, இந்தாண்டு மாத்திரம் நீட் தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இறைஞ்சி நின்றது, அ.தி.மு.க. அரசின் உண்மைச் சொரூபத்தை என்றைக்கோ வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.
தமிழகச் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற முடியாமல், அத்தீர்மானம் திருப்பி அனுப்பப்பட்டதை அப்படியே மறைத்து விட்டு, சட்டமன்றத்திலேயே, "அது இன்னும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நிறுத்தி மட்டுமே வைக்கப்பட்டுள்ளது" எனக் கூசாமல் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு, பின்னர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞரே உண்மையைப் போட்டுடைத்தவுடன் மூக்குடைபட்டு நின்ற அமைச்சர் விஜயபாஸ்கர், ஏதோ தாங்கள்தான் நீட் தேர்வை ஆதியோடு அந்தமாக எதிர்த்ததாகப் பேட்டி அளிப்பது வெட்கக்கேடானது.
தமிழகச் சட்டமன்றத் தீர்மானத்திற்கு உயிரூட்டி , மத்திய அரசை வலியுறுத்தி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை எடப்பாடி ஆட்சி பெற்றிருக்குமானால், நீட் தேர்விலிருந்து தமிழகம் விலக்குப் பெற்றிருக்கும். ஆனால், கழகத் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான தளபதியார் அவர்கள், இன்றைய செய்தியாளர் சந்திப்பில் எடுத்துக்காட்டியதைப் போல, முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ டெல்லிக்குப் போய், பிரதமரையோ அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சரையோ ஒரு முறை கூட நேரில் சந்தித்து, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதற்கோ, அதை ரத்து செய்வதற்கோ வலியுறுத்தாமல்; போதிய அழுத்தம் தராமல் கபட வேடம் பூணுவதிலும், கூனிக்குறுகி மத்திய அரசிடம் அடிமைச்சேவகம் செய்வதிலுமே கவனமாக இருக்கின்றார்கள் என்பது தான் கழகத்தின் ஆணித்தரமான குற்றச்சாட்டு.
எல்லாவற்றுக்கும் மேலாக, எதிர்க்கட்சிச் தலைவர் எழுந்து வேண்டுகோள் விடுத்த பின்னரும், சட்டப்பேரவையில் நீட் தேர்வினால் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட நமது மாணவச் செல்வங்களுக்கு ஓர் அஞ்சலி கூடச் செலுத்த முன்வராத அடிமை எடப்பாடி ஆட்சிக்கும், அதன் அமைச்சர்களுக்கும் தமிழ்நாட்டு மக்கள் கனன்று கொண்டிருக்கும் தங்கள் உணர்வுகளை ஒன்று கூட்டித் தக்கபாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.” என தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.