தி.மு.க

"எப்பொழுதும் புகழ் மணக்கும் முப்பெரும் விழா ! அனைவரும் வாரீர்": தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மடல்

தி.மு.க-வின் முப்பெரும் விழாவுக்கு அழைப்பு விடுத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மடல் வெளியிட்டுள்ளார்.

"எப்பொழுதும் புகழ் மணக்கும் முப்பெரும் விழா ! அனைவரும் வாரீர்": தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மடல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.கவின் முப்பெரும் விழாவுக்கு அழைப்பு விடுத்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

" நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

‘மானமும் அறிவும் மனிதருக்கு அழகு’ என்ற மாபெரும் தத்துவத்தை மனித குலத்திற்கு வழங்கி, அதற்காகவே வாழ்நாள் முழுதும் அயராது பாடுபட்டு திராவிட இனத்தை சுயமரியாதை மிக்க அறிவு சமுதாயமாக மாற்றியமைத்த தந்தை பெரியாரின் பிறந்தநாள் செப்டம்பர் 17. அந்தப் பெருமைமிகு தந்தையின் தகுதிகள் நிறைந்த தனயனாக-தமிழருக்கெல்லாம் தனிக் குணமுள்ள தமையனாக-தாய்த்திருநநாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தலைமகனாக விளங்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15. தந்தை பெரியாரின் தத்துவங்களை, ஜனநாயக-அரசியல் களத்தில் வென்றெடுத்திட, திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற பேரியக்கத்தை அறிஞர் அண்ணா அவர்கள் தோற்றுவித்த நாளும் செப்டம்பர் 17. கொள்கைகளையும் இலட்சியங்களையும் இதயத்தில் என்றும் ஏந்தி, நம் பொதுவாழ்வுப் பயணத்தைத் தொடர்ந்து நடத்திட இந்த மூன்று விழாக்களையும் இணைத்து, முப்பெரும் விழாவாக்கியவர் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

அவர் வகுத்துத் தந்த வண்ணமிகு பாதையில், உங்களில் ஒருவனாக இந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று, உங்களோடு இணைந்து உத்வேகத்துடன் பயணிக்கும் உயர்வானதொரு வாய்ப்பைப் பெற்றுள்ள நிலையில், இந்த ஆண்டும் முப்பெரும் விழாவினை, சீரும் சிறப்புமாக நடத்தித் தர வேண்டும் என தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளாம் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். வழக்கமாக, முப்பெரும் விழா என்றால் அது ஒரு மாநாடு போல கழகத் தொண்டர்களின் பெருந்திரளான கூட்டத்துடன் நடைபெறுவது வழக்கம். கொரோனா கால ஊரடங்கின் காரணமாக இம்முறை அந்த வாய்ப்பு அமையவில்லை. என்றாலும், கொள்கைகளை எடுத்துரைக்கும் வாய்ப்பினை நாம் ஒருபோதும் தவறவிடுவதில்லை.

ஊரடங்கு கால விதிமுறைகளை மீறிடாமல், பாதுகாப்பும்-தனி மனித இடைவெளியும் கொண்ட வகையில், செப்டம்பர் 15ல் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முப்பெரும் விழா நடைபெறுகிறது. கழகத்தின் மாநில நிர்வாகிகள், சென்னையில் உள்ள மாவட்டச் செயலாளர்கள், பேரவைக் கூட்டத் தொடரில் பங்கேற்றிடும் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நேரடியாகப் பங்கேற்றிடும் வகையில் கலைஞர் அரங்கில் முப்பெரும் விழா இனிதே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. “கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளான எங்களுக்கு அந்த விழாவில் பங்கேற்க வாய்ப்பில்லையா?” எனக் கேட்கின்ற பல்லாயிரம் தோழர்களின் பாசமிகு கொள்கைக் குரலை உணர்ந்து, முப்பெரும் விழா நிகழ்வினை நேரலையாக வழங்குகிறது ‘கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி’. தலைவர் கலைஞரும், இனமானப் பேராசிரியரும் நம்மிடையே இல்லாத நிலையில், அவர்களின் நினைவு போற்றி நடைபெறும் இந்த முப்பெரும் விழாவுக்கு கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் தலைமையேற்று சிறப்பிக்கவிருக்கிறார். பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்கள், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்கள், துணைப் பொதுச்செயலாளர்களான திரு.ஐ.பெரியசாமி, முனைவர் க.பொன்முடி, திருமதி.சுப்புலட்சுமி ஜெகதீசன், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். சென்னை மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.நே.சிற்றரசு வரவேற்புரை ஆற்றுகிறார்.

முப்பெரும் விழா என்றால் அதில் முத்தாய்ப்பாக அமைவது கழகத்தின் சார்பில் வழங்கப்படும் விருதுகள்தான். அந்த விருதுகளையும் பரிசுகளையும் வழங்கி சிறப்புரையாற்றும் பொறுப்பினை உங்களில் ஒருவனான எனக்கு வழங்கியிருக்கிறது தலைமைக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்தின் கொள்கை வழி நின்று, இயக்கத்திற்கும் இனத்திற்கும் மொழிக்கும், மக்களின் உரிமைகளுக்காகவும், அயராது தொண்டாற்றிய கழகத்தினருக்கு விருதுகளை வழங்கி சிறப்பிக்கும் நல் வழக்கத்தினை நம் உயிர்நிகர்த் தலைவர் கலைஞர் அவர்கள் அறிமுகப்படுத்தி, தொடர்ந்து செயல்படுத்தி வந்தார்.

அவர் வழியில் தொடரும் இந்த விருதுகள் வழங்கும் விழாவில், இம்முறை பெரியார் விருது கழகத்தின் மூத்த முன்னோடியும், தலைவர் கலைஞர் அவர்களின் கீழத்தஞ்சை மாவட்டத்தில் கழகத்தின் வளர்ச்சிக்கு, கண் அயராது பாடுபட்டவருமான மா.மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. அண்ணா விருது பெறுபவர், மாணவப் பருவத்திலேயே இந்தி எதிர்ப்புப் போராட்டக் களம் கண்டவரும், அந்தப் போராட்ட வரலாற்றை ஆங்கிலம்-தமிழ் இருமொழிகளிலும் ஆவணப் படுத்தி, புத்தகமாக எழுதியவரும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும், ‘தி.மு.க வரலாறு’ நூலின் ஆசிரியருமான, முனைவர் அ.இராமசாமி அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

கலைஞர் விருது பெறுபவர் எந்நாளும் தலைவர் கலைஞர் அவர்களை மறவாத நெஞ்சினர்-தஞ்சை மண்ணில் கழகத்தைக் கட்டிக்காத்தவர்-மக்களின் பேராதரவுடன் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்-இலக்கிய ஆர்வலர்-கழக வர்த்தக அணி புரவலர் - முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம் உபயதுல்லா அவர்கள். பாவேந்தர் விருது பெறுபவர், கழகத்தின் சார்பில் ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காக குரல் கொடுப்பவரும் தலைவர் கலைஞர் அவர்களின் அமைச்சரவையில் பங்கேற்று மக்களுக்கான திட்டங்களை செவ்வனே செயல்படுத்தியவருமான திருமதி.ஆ.தமிழரசி அவர்கள். பேராசிரியர் விருது பெறுபவர் பகுத்தறிவு-சுயமரியாதைக் கொள்கை வழுவாத கழகத்தின் மூத்த முன்னோடி-தலைவர் கலைஞரின் பேரன்பிற்குரியவர்-இனமானப் பேராசிரியர் அவர்களிடம் தனி மதிப்பு கொண்டவரான சுப.இராஜகோபால் அவர்கள்.

திராவிட முன்னேற்றக் கழகம் தனது 71 ஆண்டுகாலப் பயணத்தில் சந்தித்திருக்கும் களங்கள், அந்தக் களங்களில் தங்களை அர்ப்பணித்துப் பணியாற்றியவர்கள், இயக்கமே உயிர்மூச்சு என்ற இணையிலாக் கொள்கையைக் கொண்டவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருதுகள், கழக வரலாற்றை எடுத்துரைப்பதுடன், இளைய தலைமுறையினர் தங்கள் களப்பணிகளை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு வழிகாட்டியாகவும் அமைகிறது. கடைசித் தொண்டன் வரை, ஒவ்வொருவரையும், அவரது உழைப்பினையும் இந்த இயக்கம் பாராட்ட எந்நாளும் தயங்காது என்பதையும் விருது வழங்கும் விழா எடுத்துரைக்கிறது.

ஒப்பற்ற கொள்கைகளை முழங்கிடும் முப்பெரும் விழாவின் மூலம், நமக்கு கிடைக்கிற ஊக்கமும் உற்சாகமும், அடுத்தடுத்து நாம் சந்திக்கும் களங்களுக்கேற்ற வலிமையைத் தரக்கூடியவை. அந்தவகையில் ஒவ்வொரு கழகத் தொண்டரைப் போலவே, உங்களில் ஒருவனான நானும், முப்பெரும் விழாவினைக் கழகம் காணவிருக்கிறது. இது அடுத்தடுத்த வெற்றி விழாக்களுக்கான முன்னோட்டமாகக் கருதுகிறேன்.

தந்தை பெரியார் அவர்களையும், பேரறிஞர் அண்ணா அவர்களையும், தலைவர் கலைஞர் கட்டிக்காத்த இந்த இயக்கத்தையும் ஏற்றிப் போற்றிப் பாராட்டிடும், முப்பெரும்விழாவினைக் கண்டு களித்திட-கருத்துகளைப் பெற்றிட-அடுத்த களத்திற்குத் தயாராகிட, கரங்குவித்து வணங்கி, அன்புடன் அழைக்கிறேன்; அனைவரும் வாரீர் !" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories