இன்று (18-08-2020) மாலை, திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணி சார்பில் 'கலைஞர் தந்த சொத்துரிமை' என்ற தலைப்பில் காணொலி கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார். அதன் விவரம் வருமாறு :
“ 'கலைஞர் தந்த சொத்துரிமை' என்ற தலைப்பின் கீழ் திராவிட முன்னேற்றக் கழக மகளிரணி சார்பில் நடைபெறும் இந்த காணொலிக் கருத்தரங்கில் எனக்கு முன்னால் பேசிய, கழக மகளிரணிச் செயலாளர் தங்கை கனிமொழி அவர்களே!
திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர், சமூகச் சீர்திருத்தப் பேச்சாளர் மதிப்பிற்குரிய வழக்கறிஞர் அருள்மொழி அவர்களே!
நாடறிந்த பேச்சாளர் பாசமிகு பர்வீன் சுல்தானா அவர்களே!
காணொலி மூலமாகவும், தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாகவும் இந்தக் கருத்தரங்கை கேட்டு வருகிற பெரியோர்களே, தாய்மார்களே!
மகளிர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகளே! செயல் வீராங்கனைகளே!
உங்கள் அனைவருக்கும் வணக்கம்!
சில நாட்களுக்கு முன்பு நம்முடைய கல்வி உரிமையைக் காப்பாற்றுவதற்காக, இப்படியொரு காணொலிக் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்து நடத்தினோம்.
இப்போது நடைபெறக்கூடிய கருத்தரங்கமானது நாம் அடைந்த வெற்றியைக் கொண்டாடுவதற்கான விழா என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
'மகளிருக்கும் சொத்தில் சம பங்கு உண்டு' என்பதைத் தீர்மானமாகப் போட்ட தந்தை பெரியாரின் கனவை அதைத் தொடர்ந்து வலியுறுத்திய பேரறிஞர் அண்ணாவின் விருப்பத்தை - அதைத் தமிழகத்தில் சட்டமாக்கிய நம்முடைய தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் துணிச்சலை - இன்றைய தினம் உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டு இருக்கிறது என்றால் இது சாதாரண வெற்றியல்ல; சரித்திர வெற்றி!
திராவிட இயக்கத்துக்குக் கிடைத்த வெற்றி! திராவிட முன்னேற்றக் கழகத்துக்குக் கிடைத்த முழுவெற்றி!
அதனால்தான் இந்தக் காணொலிக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம், பெரியார் இல்லையே… அண்ணா இல்லையே… கலைஞர் இல்லையே… என்ற ஏக்கம் தான் ஏற்படுகிறது. அவர்கள் இன்று இருந்திருந்தால் துள்ளிக் குதித்து மகிழ்ந்திருப்பார்கள்!
திராவிடர் இயக்கம் எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கங்களில் மிக முக்கியமான ஒரு கொள்கைக்கு உச்சநீதிமன்றம் இன்றைய தினம் ஒப்புதல் தந்ததை விட, பெரியாருக்குப் பெருமை… அண்ணாவுக்குப் பெருமை… கலைஞருக்குப் பெருமை… வேறு என்ன இருக்க முடியும்!
இதில் நமக்கு என்ன பெருமை என்றால்; நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பெரியார் அவர்கள் போட்ட தீர்மானத்தை - 31 ஆண்டுகளுக்கு முன்னால் கலைஞர் அவர்கள் நிறைவேற்றிக் கொடுத்த சட்டத்தை - இன்று உச்சநீதிமன்றம் வழிமொழிந்திருக்கிறது என்றால், நம்முடைய தந்தை பெரியார் அவர்களின் - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தொலைநோக்குப் பார்வை நமக்குப் பெருமையாக இருக்கிறது!
இந்த சொத்துரிமை சட்டத்தில் பல்வேறு தீர்ப்புகள் மூலம் ஏற்பட்ட குழப்பங்களுக்கு உச்சநீதிமன்றம் தீர்வு கண்டிருக்கிறது.
பெண்ணுக்குப் பிறந்த தேதியிலிருந்து சொத்துரிமை உண்டு. தந்தை இருந்தாலும் - இறந்தாலும் அவரின் சொத்தில் உரிமை உண்டு. ஆணுக்கும் - பெண்ணுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு. - என்ற வரலாற்று சிறப்பு மிக்க- முத்தாய்ப்பான தீர்ப்பினை உச்சநீதிமன்றம் தற்போது வழங்கியிருக்கிறது.
அதில் இன்னும் பெண்ணுக்குக் கிடைக்கும் சொத்து அவரது வாரிசுகளுக்குப் போவது பற்றித் தெளிவு இல்லை என்று செய்திகள் வருகின்றன. அதிலும் சீர்திருத்தம் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.
பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்ற தீர்மானம் '1929-ம் ஆண்டு சுயமரியாதை இயக்க மாநாட்டில்'தான் முதன்முதலாக நிறைவேற்றப்பட்டது என்று அனைவரும் நினைக்கிறோம். ஆனால் அதற்கு முன்னதாகவே, 1927-ம் ஆண்டு நடந்த 'சென்னை மாகாண பார்ப்பனரல்லாத இளைஞர் முதலாவது மாநாட்டில்' இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1928-ம் ஆண்டு சென்னையில் 'சீர்திருத்தக்காரர்கள் மாநாடு' என்ற ஒரு மாநாடு தந்தை பெரியார் தலைமையில் நடந்துள்ளது. அதிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக பெரிய அளவில் கூட்டப்பட்ட மாநாடுதான், 'முதலாவது சுயமரியாதை மாநாடு' - 1929ல் நடந்த மாநாடு. அந்த சொத்துரிமைத் தீர்மானம் இன்றைக்கு வேண்டுமானால் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன்னால் இது புரட்சிகரமான தீர்மானம்.
தந்தை பெரியார் அவர்கள் தீர்மானங்களில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிக் காட்டினார்கள் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும்!
அதில் மிக முக்கியமாக, 13 ஆண்டுகள் கழித்து 1989-ம் ஆண்டு முதலமைச்சர் ஆன முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் "பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை" கொண்டு வந்து நிறைவேற்றினார்கள்.
7.5.1989-ம் நாள் தமிழகச் சட்டமன்றத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அன்றைய தினம் மிகுந்த மகிழ்ச்சியோடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்துக்கு வந்திருந்தார்கள். அவர் வரும் போது தன் கையில் ஆங்கில புத்தகம் ஒன்றை எடுத்து வந்தார். அது நீதிக்கட்சிக் காலத்து வரலாற்று நூல். அந்த நூலில் இருக்கும் 1929 செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க மாநாட்டு நிகழ்ச்சிகளை முதல்வர் கலைஞர் அவர்கள் வாசித்தார்கள்.
"இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படும் போது எனக்கு 5 வயது தான். 60 ஆண்டுகள் கழித்து எனது 65 ஆவது வயதில் இதனைச் சட்டமாக கொண்டு வரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. அத்தகைய சுயமரியாதை மாநாட்டிற்கும் அடிகோலிய பெரியார் வாழ்க! அவரது வழித்தோன்றல் அண்ணா வாழ்க! என்று சொல்லி இந்தச் சட்டத்தை அனைவரும் நிறைவேற்றித் தர வேண்டும்" என்று பேசினார்கள்.
பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்ற வரலாற்றுப் புகழ் கொண்ட சட்டம் அன்றைய தினம் நிறைவேறியது. பெண்கள் சமூக உரிமை, பொருளாதார உரிமை, சொத்துரிமை, சுயசிந்தனை உரிமை, சுயமாகச் செயல்படும் உரிமை கொண்டவர்களாக வளர வேண்டும் என்பதற்காக எத்தனையோ நலத்திட்டங்களைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு அமல்படுத்தியது.
1. பெண்களுக்குச் சொத்தில் சம உரிமைச் சட்டம் கொண்டு வந்தது தி.மு.க. அரசு.
2. பணியிடங்களில் பெண்களுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு தந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.
3. உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு தந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.
4. ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்கியது தி.மு.க. அரசு.
5. பெண்கள் சொந்தக் காலில் நிற்க வசதியாக மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்தது தி.மு.க. அரசு.
6. ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களுக்கு முதலில் பள்ளிக்கல்வி வரை இலவசக் கல்வியும், அதன் பிறகு கல்லூரி வரை இலவசக் கல்வியும் வழங்கியது தி.மு.க. அரசு.
7. ஒன்று முதல் 5 வரையிலான அரசுப் பள்ளி ஆசிரியர்களாக மகளிரை நியமித்த அரசு தி.மு.க. அரசு.
8. கிராமப்புறப் பெண்களுக்குப் பணி நியமனத்தில் முன்னுரிமை கொடுத்த அரசு தி.மு.க. அரசு.
9. ஈ.வெ.ரா. நாகம்மையார் நினைவு மகளிர் இலவசப் பாடப்புத்தகத் திட்டம் அமைத்தது தி.மு.க. அரசு.
10. டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித்திட்டம்
11. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம்
12. டாக்டர் தருமாம்பாள் விதவை மறுமண நிதியுதவித் திட்டம்
13. அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித்திட்டம்
14. ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழைக் கைம்பெண்களின் மகள்களுக்கான திருமண உதவித்திட்டம்
15. பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் தரும் சத்தியவாணி முத்து அம்மையார் திட்டம்
16. காமராசரின் தாயார் சிவகாமி அம்மையார் பெயரில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்
17. பேரறிஞர் அண்ணா அவர்களின் தாயார் பங்காரு அம்மையார் பெயரில் மகளிர் குழுக்கள் திட்டம்
18. எம்.ஜி.ஆர் அவர்களின் தாயார் சத்தியா அம்மையார் குழந்தைகள் காப்பகம் திட்டம்
19. மகளிர் தொழில் முனைவோர் உதவித்திட்டம்
20. தொழில் மனை ஒதுக்கீட்டில் மகளிருக்கு முன்னுரிமை
21. மீனவ மகளிர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு மோட்டார் பொருத்திய இலவச வாகனம்
22. மீனவ பெண்கள் மீன் அங்காடி அமைக்க நிதி உதவி
23. மகளிருக்கு சேமிப்புடன் கூடிய சிறுவணிகக் கடனுதவி.
24. திருமணம் ஆகாத 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்காக மாதம் தோறும் உதவித்தொகை
25.திருக்கோயில்களில் செயல்படும் அறங்காவலர் குழுக்களில் மகளிர் ஒருவரை அறங்காவலராக நியமிக்க வேண்டும் என்று சட்டமாக்கப்பட்டது.
பெண் காவலர் முதல் பெண் டி.ஜி.பி. வரை நியமித்தவர் கலைஞர்.
முதல் குடியரசுத் தலைவராக திருமதி பிரதிபா பாட்டீல் அவர்கள் வெற்றி பெறுவதற்குப் பாடுபட்டவர் கலைஞர்.
முதல் மக்களவை சபாநாயகராக- தன்னிகரற்ற தலைவர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் மகள் மீராக்குமார் தேர்வு செய்யப்படுவதற்கு உற்ற துணையாக இருந்தவர் கலைஞர்.
- இப்படி கோட்டை முதல் கோயில் வரை பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்து மகளிர் முன்னேற்றத்துக்கு வழிவகை அமைத்த அரசு திராவிட முன்னேற்றக் கழக அரசு, முத்தமிழறிஞர் கலைஞர் அரசு என்று பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்.
இத்தோடு நம்முடைய பணி முடிந்துவிட வில்லை; இன்னும் ஏராளமான பணிகள் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றத்தில் மகளிருக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு சட்டம். இன்று நாட்டில் உள்ள மக்கள் தொகையில் - 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 58 கோடி பெண்கள் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் 3.6 கோடி பேருக்கு மேல் மகளிர் இருக்கிறார்கள். ஏறக்குறைய சரி பாதி மக்கள் தொகைக்கு நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் உரிய வாய்ப்பு வழங்கப்படவில்லை.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கூட- 78 பெண் எம்.பி.க்கள் மட்டுமே வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குச் சென்றார்கள். இது வெறும் 14.3 சதவீதம். ஆனால் நாம் மகளிருக்கு கேட்பதோ 33 சதவீதம். மகளிர் இடஒதுக்கீட்டிற்கான சட்டமுன்வடிவு 9.3.2020 அன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் இன்றுவரை அது மக்களவையில் நிறைவேறவில்லை. சட்டம் ஆக வில்லை.
மகளிர் இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த சர்ச்சையில் அந்த இடஒதுக்கீட்டை அளிக்காமல் - பெண்களின் உரிமையை கொடுக்க மறுத்து வருகிறார்கள்.
2010-ல் மகளிர் இடஒதுக்கீடு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட போது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொன்னதை இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன்.
"இடஒதுக்கீடு என்பது ஒரு பழத்தைப் போன்றது. அந்தப் பழத்துக்குள் ஒரு சுளையை எடுத்துச் சாப்பிடுவதுதான் உள்இடஒதுக்கீடு. இப்போது நமக்குப் பழம் கிடைத்துள்ளது. மகிழ்ச்சி அடைவோம். இனி யாருக்கு எத்தனை சுளைகள் என்பது பற்றி முடிவு செய்வோம்" என்று கூறி- மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாகச் செயல்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்தியவர்தான் கலைஞர் அவர்கள். நரேந்திர மோடி 2014-ல் பிரதமராகப் பதவியேற்றவுடன் மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக நிறைவேற்றுங்கள் என்று கடிதம் எழுதியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
நானும் பிரதமருக்கு கடிதம் எழுதி இந்த இடஒதுக்கீட்டை உடனடியாக கொடுங்கள் என்று கூறியிருக்கிறேன்.
தங்கை கனிமொழி அவர்கள் இதற்காக டெல்லியில் மகளிரைத் திரட்டிதிராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பேரணி நடத்தி டெல்லியில் உள்ள தலைவர்களை எல்லாம் அழைத்துப் பேச வைத்தார்.
கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து மகளிர் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள்.
ஆகவே மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு நிறைவேறுவதற்கான அனைத்துப் பணிகளையும் திராவிட முன்னேற்றக்கழகம் தொடர்ந்து செய்யும் என்று உறுதியளிக்கிறேன்.
அதேபோல், மத்திய அரசுப் பணியிடங்களில் மகளிருக்கு 30 சதவீத இடஒதுக்கீடும் பெற்றிட தி.மு.க. பாடுபடும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மிகமுக்கியமான ஒரு வாக்குறுதி இருக்கிறது. அது 98-வது வாக்குறுதி. "அண்மைக் காலமாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் பல்வேறு காரணங்களால் பல்கிப் பெருகி வருகின்றன.
அவற்றில் மிக முக்கியமானது சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் ஆகும். ஏதும் அறியாப் பெண்களைச் சமூக ஊடகங்களின் அநாகரீக தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பது அவசரமும் அவசியமும் ஆகும். சமூக ஊடகங்கள் வெளியிடப்படும் ஆபாசப் படங்கள், செய்திகள் போன்றவற்றைத் தடுப்பதற்கு உரிய நாடாளுமன்றச் சட்டம் கொண்டுவர மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தும்" என்று அதில் குறிப்பிட்டு இருந்தோம்.
அடுத்து வரும் காலங்களில் இதற்கான முயற்சியை எடுப்போம். காலங்கள் மாறி பெண்கள் கல்வி நிலையங்களுக்கு வந்துவிட்டார்கள்.
அனைத்து வேலைகளுக்கும் வந்துவிட்டார்கள். ஆண்கள் பார்க்கும் வேலை பெண்கள் பார்க்கும் வேலை என எந்த வேறுபாடும் இப்போது இல்லை.
ஆனால் பொதுவெளியில் துணிச்சலாகக் கருத்துக்களைச் சொல்லும் பெண் பேச்சாளர்கள், போராட்டக்காரர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆபாசமான தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.
பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை தருவதைப் போன்றே - பாலியல் ரீதியாக அவர்களை விமர்சிப்பதும் மிகமிக மோசமான காரியம். இதனைத் தடுப்பதற்காக சட்டங்கள் கொண்டுவரப்பட- கழக ஆட்சி அமையும் போது நடவடிக்கை எடுக்கப்படும்.
திராவிட இயக்கத்தின் சமூகநீதிப் பயணத்தில் நாம் மிக முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கிறோம்.
காலம் காலமாக எந்தக் கொள்கைகளையெல்லாம் மாநில அரசாக இருந்து நிறைவேற்றினோமோ - மத்திய அரசை வைத்து நிறைவேற்ற வைத்தோமோ அந்தக் கொள்கைகளுக்கு இன்று சோதனைக் காலம் வந்துள்ளது.
சமூகநீதி கேள்விக்குறியாக்கப்படுகிறது; மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன; தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறது; இந்தி மொழி திணிக்கப்படுகிறது; சமஸ்கிருதத்துக்கு அதிகப்படியான முக்கியத்துவம் தரப்படுகிறது.
இதன் காரணமாக அனைத்துத் தரப்பு மக்களும் பின்னுக்கு தள்ளப்படுகிறார்கள். இதனை நாம் தடுத்தாக வேண்டும். மகளிருக்குச் சொத்துரிமை என்பதற்கு அனைத்துத் தரப்பு ஒப்புதலும் பெறுவதைப் போல ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும்.
அப்படிப் பெற்றால் தான் தந்தை பெரியாரின் இலட்சியங்களை, பேரறிஞர் அண்ணாவின் இலட்சியங்களை, முத்தமிழறிஞர் கலைஞரின் இலட்சியங்களை வென்றதாகப் பொருள்.
அத்தகைய போராட்ட நேரத்தில் நமக்கு கிடைத்த இனிப்பான செய்தியாக உற்சாகம் ஊட்டும் செய்தியாக சொத்துரிமை குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துள்ளது.
இதுபோன்ற பல வெற்றிகளைத் தொடர்ந்து பெறுவோம் என்று கூறி விடைபெறுகிறேன். வணக்கம்!
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.