தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கையோ ஆயிரமாயிரமாக உயர்ந்துகொண்டே வருகிறது.
சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே அதிகரித்து வந்த கொரோனா தொற்று தற்போது மாநிலம் முழுவதிலும் அனைத்து மாவட்டங்களிலும் தீயாய் பரவி வருகிறது.
இப்படியான சூழல் நிலவும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க அரசோ தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக அளவில் பரவவில்லை; இன்னும் கட்டுக்குள்தான் உள்ளது என தொடர்ந்து மக்களிடையே பொய்யுரைத்து வருகிறது.
அதேபோல கொரோனா தொற்று இதோ குறைந்துவிடும்; 3 நாளில் ஓடிவிடும் எனவும் அவ்வப்போது முதலமைச்சரே கூறி வருவது மக்கள் நலன் மீதான அரசின் அலட்சியத்தன்மையையே குறிக்கிறது.
அதுபோல, பத்தே நாட்களில் கொரோனா தொற்று தமிழகத்தில் குறைந்துவிடும் என கடந்த ஜூலை 15ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். இன்றோடு முதல்வர் கூறிய அந்த 10 நாள் முடியவிருக்கிறது. ஆனால் நேற்றைய தமிழகத்தின் கொரோனா தொற்று எண்ணிக்கை 6,700 ஐ கடந்திருக்கிறது.
இந்த நிலையில் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இதுதொடர்பாக அ.தி.மு.க அரசை சாடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “பத்தேநாளில் கொரோனா குறையும் என முதல்வர் பழனிசாமி கிளப்பிவிட்டு இன்றோடு 10 நாட்களாகிவிட்டன. ஏற்கனவே, 3 நாட்களில் கொரோனா ஜீரோ வரும் என்றார். பாதிப்பு எண்ணிக்கையில் ஜீரோக்கள் கூடியதே மிச்சம். கொரோனாவுக்கு ஒன்றிரண்டு தெரியாததற்கு நான் என்ன செய்யமுடியும் என்று ஒருநாள் சொன்னாலும் சொல்வார்.” என வீடியோவையும் இணைத்து சுட்டிக்காட்டியுள்ளார்.