கொரோனா உலகப் பேரிடரால் ஏற்பட்டிருக்கும் ஊரடங்கு முடக்கத்தால் அனைத்து தரப்பட்ட மக்களும் வருமானமின்றி தவித்து வருகிறனர். குறிப்பாக அன்றாடம் பிழைப்பு நடத்தி வருமானம் ஈட்டும் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வறுமையைப் போக்கும் விதத்தில் திருவொற்றியூரில் உள்ள ஏழை, எளிய நடுத்தர பெண்களுக்கு சுயதொழில் செய்து பணம் சம்பாதிக்கும் 'நலமான திருவொற்றியூர்' என்ற திட்டத்தை தி.மு.க மாணவரணி மாநில துணைச் செயலாளர் வீ.கவி கணேசன் தொடங்கியுள்ளார்.
தையல் இயந்திரம் வைத்திருக்கும் பெண்கள் இந்த திட்டத்தில் கலந்துகொள்ளலாம். கொரோனாவில் இருந்து தம்மைத்தாமே பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் (Mask) அவசியமாகிறது. அதனை தயாரித்து தரும் பணியே இந்த திட்டத்தின் நோக்கம்.
தையல் இயந்திரம் வைத்திருக்கும் பெண்களுக்கு முகக்கவசம் (Mask) தயார் செய்வதற்கான பொருட்கள் அனைத்தும் இல்லம் தேடி இலவசமாக வழங்கப்படுகிறது. அவர்கள் முகக்கவசம் (Mask) தயாரித்த பின்னர், குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து இவர்களே பெற்றுக்கொள்கிறார்கள்.
அப்படி தயார் செய்யப்பட்ட முகக்கவசங்கள் (Mask) அனைத்தும் இலவசமாக திருவொற்றியூர் பகுதி மக்களுக்கே வழங்கப்படும். பசியில்லா சமுதாயம் படைத்திட கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வழியில் ‘நலமான திருவொற்றியூர்’ உருவாக்கும் இம்முயற்சிக்கு இதுவரை 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் பெயரினை முன்பதிவு செய்துள்ளனர்.
திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த மகளிர் இந்த மகத்தான வாய்ப்பைப் பெற, 99941 04374 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.