கொரோனா கால மின்சார கட்டணத்தை தமிழக அரசு வசூலிக்கக் கூடாது அல்லது சலுகையாவது வழங்க வேண்டும் என சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தின்போது தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அநியாய மின்சார கட்டண உயர்வை கண்டித்து சென்னை தாம்பரத்தில் உள்ள திரும்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கறுப்புக்கொடிகள் ஏற்றிய நிலையில் தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க நிர்வாகிகள், பொதுமக்கள் மின்சார கட்டண உயர்வை கண்டித்து பதாகைகளை ஏந்திய நிலையில் அ.தி.மு.க அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, “கொரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரம் இழந்து வீட்டில் இருக்கும் நிலையில் அவர்களுக்கு அநியாயமாக மின்சார கட்டணம் அதிகரித்துள்ளது. இதற்கு தமிழக அரசு முழுவதும் விலக்கு அளிக்கவேண்டும் அல்லது 50% சதவிகிதம் கட்டவோ, கால அவகாசம் வழங்கவோ வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் ஒட்டுமொத்தமாக மக்களின் இன்னல்கள் விலக இந்த அ.தி.மு.க ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும் என்றார்.
அதேபோல, தி.மு.க மகளிரணி செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, சென்னை சி.ஐ.டி காலனியில் உள்ள அவரது இல்லம் முன்பு கறுப்புக்கொடி ஏந்தி மகளிர் அணி நிர்வாகிகளுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய கனிமொழி, “கொரோனா நோயால் ஒருபுறம் வேலை இழந்து வருமானம் இன்றி தவித்து வரும் நிலையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி மேலும் மக்களை துன்பத்தில் ஆழ்த்தி வருகிறது. எதிர்க்கட்சிகளின் எந்த ஒரு ஆலோசனைகளையும் ஏற்றுக் கொள்ளாமல் மக்கள் விரோதப்போக்கில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
கொரோனா காலத்திலும் மக்கள் நலனைச் சிந்திக்காமல் அவர்களின் நலமே சிந்தித்து மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் குளறுபடி என பல்வேறு முறைகேடுகளில் அ.தி.மு.க அரசு ஈடுபடுகிறது” எனக் குற்றஞ்சாட்டினார்.