தமிழகத்தில் அநியாய மின் கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கறுப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் தொழில் ஈட்ட முடியாமல் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில், மின் கட்டணங்கள் செலுத்த கால அவகாசத்தை மட்டும் கொடுத்துவிட்டு அதிமுக அரசு பன்மடங்கு கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது.
மின்சார கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள குழப்பங்களையும் பிழைகளையும் நீக்கி மின்கட்டணத்தில் சலுகை அளிக்க வலியுறுத்தி இன்று (ஜூலை 21) கறுப்புக்கொடி அறப்போராட்டம் நடத்துவது என தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கழகத்தினர் அனைவரது வீட்டின் முன்பும் கறுப்புக்கொடி நிறுவப்பட்டு அதிமுக அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பி போராடுவது என முடிவெடுக்கப்பட்டது. அதன்படி மாநிலம் முழுவதும் இன்று காலை கறுப்புக்கொடி அறப்போர் நடைபெற்றது.
தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்பட்டு, பாதுகாப்பு அம்சங்களான முகக்கவசங்களை அணிந்து கிருமி நாசினி பயன்படுத்தப்பட்டு பொது மக்களின் பங்களிப்புடன் இந்த அறப்போர் நடத்தப்பட்டது.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இல்லம் முன்பாக கறுப்பு சட்டை அணிந்து அ.தி.மு.க அரசை கண்டித்து கறுப்புக் கொடி ஏற்றினார்.
அ.தி.மு.கவின் மின்கட்டண கொள்ளை அடிப்பது. கட்டணத்தை மக்கள் தலையில் கட்டுவதும், உடனடியாக மற்ற மாநிலம் போல் மின்கட்டண சலுகை அளிக்க வேண்டும் என பாதகை ஏந்தி தி.மு.க தலைவர் கோஷமிட்டார்.
அதேபோல, தி.மு.க. மகளிரணிச் செயலாளர் கனிமொழியும் தனது இல்லம் முன்பு கறுப்புக் கொடி ஏந்தி எடப்பாடி அரசைக் கண்டித்து முழக்கமிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் அண்ணா அறிவாலயத்தின் முன் மின்கட்டணத்தில் சலுகை அளிக்கும் படி பதாகைகளை ஏந்தி போராடினர்.