அனிதாவைக் கொன்ற மத்திய பாஜக அரசும் மாநில அதிமுக அரசும் கொரானா காலத்தில் நீட் தேர்வை நடத்தி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை கலைக்கச் சதி செய்கிறது என தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும், மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசனும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது,
“உலகமே கொரானா தொற்றாலும் பசியாலும் பரிதவித்துக் கொண்டிருக்கும் காலத்தில் இந்த கொலைகார நீட் தேர்வை நடத்தியே தீருவேனென்று மத்திய அரசு தேர்வுக்கான தேதியை அறிவித்துள்ளது. ஆளும் அ.தி.மு.க அரசும் அதற்கு எதிர்ப்போ கண்டனமோ தெரிவிக்காமல் கொரோனா பரவலை கட்டுப்படுத்தாமல் கோட்டை விட்டதுபோல் இப்போதும் அமைதியாக இருந்து வருகிறது. அனிதா போன்ற அப்பாவி மாணவிகள் பலபேர் தனது இன்னுயிரை இந்த நீட் தேர்வுக்கு எதிராக இழந்திருந்தாலும் மத்திய பா.ஜ.க அரசும் அ.தி.மு.க அரசும் இந்த கொலைகார ’நீட்’ தேர்வைப் பற்றி எதுவும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.
மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வாக கருதப்படும் நீட் தேர்வு பல்வேறு ஏழை, எளிய, கிராமப்புற, நடுத்தர மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த்தெறிந்தது மக்கள் அனைவருக்கும் தெரியாததல்ல. நீட் தேர்வு அறிமுகம் செய்ததிலிருந்தே தி.மு.க. இளைஞர் அணியும் மாணவர் அணியும் தனது எதிர்ப்பையும், கண்டனங்களையும் தெரிவித்து எதிர்த்து போராடி வருகிறது. அதே சமயம் மத்திய பா.ஜ.க/ மாநில அ.தி.மு.க அரசுகள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள குடும்பங்கள் தங்களது அன்றாட வாழ்விற்கே சிரமப்படும் சூழலில் செப்டம்பர் மாதம் 13-ம் தேதி ஆன்லைன் மூலம் நடக்கவிருக்கும் நீட் தேர்விற்கு தயாராகுங்கள் என அறிவித்திருப்பது மருத்துவ படிப்பிற்காக தயாராகும் மாணவ/மாணவியர்களுக்கு அதிக மன உளைச்சலை கொடுத்திருக்கிறது.
மாணவர்கள் நீட் தேர்விற்கு உளவியல் அளவில் தயாராக இருக்கிறார்களா? அதற்கான பயிற்சிகளை தினமும் பெறுகிறார்களா? பயிற்சி பெறும் வாய்ப்பு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஏழை மாணவர்களுக்கு கிடைத்திருக்கிறதா என்பதைப் பற்றிய எந்த எண்ணமும் இல்லாமல் மத்திய அரசு இந்த நீட் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதற்கு அதிமுக அரசும் தலையாட்டுகிறது.
தேர்வை நடத்த வேண்டும் என்ற மத்திய அரசிற்கும், அதை எதிர்த்து வாய் திறக்காத மாநில அரசிற்கும் ஏழை மாணவர்களை பற்றி சிந்தனை செய்ய நேரம் இருந்ததாக தெரியவில்லை. ஆனால் இந்த கொரோனா காலத்தில் கூட மாணவர்களின் நலனை எவ்வாறு மேம்படுத்துவது என 15.05.2020 அன்று இணையவழி மூலம் நடத்தப்பட்ட தி.மு.க. மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த வருடம் அறிவிக்கப்பட்டுள்ள ஆன்லைன் நீட் தேர்வை ரத்து செய்து, +2 வகுப்பின் பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான சேர்க்கை நடத்த வேண்டும் என தீர்மானம் எடுத்து இந்த அரசுக்கு அறிவுரை வழங்கியது. ஆனால் இந்த அரசு அதையும் காது கொடுத்து கேட்க வில்லை.
நீட் தேர்வை நடத்தியே தீரவேண்டுமென இந்த அரசுகள் துடியாகத் துடிப்பதற்கான காரணங்களுக்கான பின்னணியை கல்வியாளர்கள் பட்டியலிடுகிறார்கள். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஏழை மாணவர்களை மருத்துவப்படிப்பு படிக்க விடக்கூடாதென்பதற்காகவே கொண்டு வரப்பட்டதே இந்த நீட் தேர்வு என்பதும் அதை உறுதிப் படுத்துவதற்காகவே இந்த கொரானா காலத்திலும் இந்த நீட் தேர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறதென்றும் கருத்து தெரிவிக்கிறார்கள் பெற்றோர்கள்.
உதாரணமாக நீட் தேர்வுக்கு இந்தச் சூழலில் தயாராக தனி அறை வேண்டும், தடங்கலற்ற இண்டெர்நெட் வசதியும் மின்கணினியும் வேண்டும். இதெல்லாம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஏழை மாணவர்களுக்கு எப்படி கிடைக்கும் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் கல்வியாளர்கள். கொரானா காலத்தில் இந்த நீட் தேர்வு நடத்துவதென்பது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை அழிப்பதற்காகவே என்று குற்றஞ்சாட்டுகிறது தி.மு.க இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி. இந்த படுபாதகச் செயலுக்கு அ.தி.மு.க அரசும் துணைபோவதுதான் கொடுமையிலும் கொடுமை. அண்ணாவின் பெயரில் கட்சியை வைத்துக் கொண்டு சமூக நீதியை கொலை செய்து தோண்டிப் புதைப்பதென்ற முடிவில் இருக்கிறது அ,தி.மு.க.
தமிழகமே ஒன்றிணைந்து கழகத் தலைவர் தலைமையில் நீட் தேர்வை எதிர்த்துக் கொண்டிருக்கும் வேளையில், தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று பொய் வேஷம் போடும் தமிழக அ.தி.மு.க அரசு நேற்று (14.7.2020) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய எஜமானர் மத்திய பா.ஜ.க அரசை வலியுறுத்தியோ அல்லது கோரிக்கை வைக்கவோ மனமில்லாமல், அதை ஏற்றுக் கொண்ட வகையில் தற்போது கிராம புற மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு என்பது தமிழக மக்களின் உரிமைகளை அடமானம் வைக்கும் எடப்பாடி அரசின் உண்மை முகம் தெரியவருகிறது.
இந்த கொரானா காலத்திலாவது அனிதாவை கொலை செய்த நீட் தேர்வை தூக்கி குப்பையில் எறிய வேண்டும். பள்ளி பொதுத்தேர்வின் இறுதி மதிப்பெண்களை வைத்து மருத்துவ சேர்க்கையை நடத்த வேண்டும். இல்லையெனில் தமிழக மக்கள் இந்த அ.தி.மு.க அரசை தூக்கி குப்பையில் எறிவார்கள். கழகத் தலைவர் தளபதியாரின் ஆணைப்படி தி.மு.க இளைஞர் அணியும் மாணவர் அணியும் அந்த வேலையை செய்து முடிக்கும். எச்சரிக்கிறோம், சிந்தித்து செயலாற்றுங்கள் முதலமைச்சரே!” என தெரிவித்துள்ளனர்.