திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (16-07-2020) காணொலி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன் முழு விவரம் பின்வருமாறு:-
1. கொரோனா நோய்த் தொற்று தீவிரமாகப் பரவி வருவதைத் தடுக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிடவும் உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக!
கொரோனா நோய் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாகப் பரவி வருகிறது. அந்த நோயைக் கண்டறிவதிலோ, நோய்த் தொற்றாளரின் தொடர்புகளைக் கண்டுபிடித்து “கொரோனா சங்கிலித்தொடரை” அறுத்துத் தடுப்பதிலோ, நோய்த் தொற்றாளர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையிலோ அ.தி.மு.க. அரசு, வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளாமல் - உயிர் காக்கும் சிகிச்சைக்கான கருவிகள், மருந்துகள், கிருமிநாசினிகள் கொள்முதலிலும், மனசாட்சி சிறிதும் இன்றி, ஊழல் - முறைகேடுகள் செய்வதற்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. கொரோனா நோய்த் தொற்று 1.50 லட்சத்தைக் கடந்து, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, அரசு மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான படுக்கை, மருத்துவர்கள், செவிலியர்கள், வெண்டிலேட்டர்கள் இன்றித் தவிக்கும் நெருக்கடியான இந்தச் சூழலிலும்; “காசு காரியத்தில் கண் வையடா!” என்பதற்கொப்ப, “கமிஷன்” கறப்பதற்காகவே பல துறைகளிலும் டெண்டர்கள் விடுவது, “ஊழலுக்கான” நோக்கில் ஒவ்வொரு மாவட்டமாகப் போய் கூட்டம் போடுவது என்று, அரசு நிர்வாகத்தை அலங்கோலப்படுத்தி - மக்களை அல்லல்படுத்திக் கொண்டிருக்கிறது அ.தி.மு.க. அரசு. அமைச்சர்கள், அதிகாரிகள் இடையே பனிப்போர் தொடங்கி - இப்போது தேர்தல் கால வசூல் - தேர்தல் கால ‘ஐ.பி.எஸ் போஸ்டிங்’ போன்றவற்றில் அ.தி.மு.க. அரசு தீவிரமாகக் கவனம் செலுத்தி வருவது, மக்கள் முன்பு உள்ள கொரோனா சவாலை உரிய வகையில் சந்திப்பதில் இந்த அரசு பெருமளவு தோல்வி அடைந்துவிட்டதைக் காட்டுகிறது.
கொரோனா முன்கள வீரர்களுக்குக் கூட போதிய கவச உடைகள் கொடுக்காததால் - மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், சுகாதாரத்துறை ஊழியர்கள் உயிரிழப்பது அதிர்ச்சியளிக்கிறது. பணியில் உயிர்த்தியாகம் செய்த “கொரோனோ முன்கள வீரர்களுக்கு” அறிவித்த 50 லட்சம் ரூபாய் நிதியுதவியைக் கூட இன்னும் அ.தி.மு.க. அரசு வழங்கவில்லை என்பது கண்டனத்திற்குரியது. ஆகவே, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து வழங்கியுள்ள ஆலோசனைகளையும், தற்போது மருத்துவம், பொருளாதாரம், தொழில் வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து வழங்கி வரும் ஆலோசனைகளையும் அ.தி.மு.க. அரசு உடனடியாக ஆழ்ந்து பரிசீலனை செய்து, நிறைவேற்றி - உள்தமிழகத்தில் வேகமாகப் பரவும் கொரோனா நோயைத் தடுத்திடவும், மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிடவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துவதோடு, பிற நோயால் பாதிக்கப்படுவோருக்கு உரிய வழக்கமான சிகிச்சைகள் மருத்துவமனைகளில் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
100 நாட்களுக்கு முன்பே, “கொரோனா 3 நாட்களில் பூஜ்யமாகிவிடும்” என்று சொன்ன முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள் நேற்று (15.7.2020), “பத்து நாட்களில் கொரோனா பரவல் குறைந்துவிடும்” என்று இரண்டாவது முறை நம்பிக்கை தெரிவித்து, ஆரூடம் சொல்லியிருப்பது நகைப்புக்குரியது; அவருக்கு கொரோனாவைப் பற்றியோ, அது ஏற்படுத்திவரும் கடும் பாதிப்புகளைப் பற்றியோ சரியான பார்வை இல்லை என்பதையே அது எடுத்துக் காட்டுகிறது. கொரோனாவை யாரும் பொழுதுபோக்குப் பொருளாகக் கொள்ளக் கூடாது; அது உயிர்களை அச்சுறுத்தும் மிகக் கடும் நோய்த் தொற்று என்று உணர்ந்து, அதைத் தடுப்பதற்கேற்ற விழிப்புணர்வை வளர்க்க வேண்டும்.
2. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர்க்கு மருத்துவக் கல்வியில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிடுக!
நாடு முழுவதிலும் இருந்து மத்திய தொகுப்பிற்கு (All India Quota) மாநிலங்கள் அளித்துள்ள 9550 முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் இந்த வருடம் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்குக் கிடைத்திருப்பது வெறும் 379 இடங்கள் மட்டுமே! ஆனால், ‘சமூகநீதிக் காவலர்’ மறைந்த வி.பி.சிங் அவர்கள் அமல்படுத்திய மண்டல் கமிஷன் பரிந்துரையின் கீழான 27 சதவீத இடஒதுக்கீட்டின்படி 2578 இடங்கள் பிற்படுத்தப்பட்ட - மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அரசியல் சட்டத்திற்கு விரோதமாக அளிக்கப்பட்ட, 10 சதவீத இடஒதுக்கீடு பெற்ற முன்னேறிய சமுதாய மாணவர்களுக்கு, 653 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கினை சுட்டிக்காட்டி, தொடர்ந்து 3 ஆண்டுகளாக, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு மிகப் பெரிய அநீதி இழைத்து வரும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு இக்கூட்டம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்காகக் காத்திராமல், ஏற்கனவே உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு மற்றும் தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடுச் சட்டத்தின் கீழ், மத்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் அளிக்கும் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் அகில இந்திய அளவில் 27 சதவீத இடஒதுக்கீட்டையும், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர்க்கு 50 சதவீத இடஒதுக்கீட்டையும் செயல்படுத்திட வேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் மத்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் மருத்துவக் கல்வி இடங்களை அளிக்கும் முறையை அறவே ஒழித்திட வேண்டும் எனவும் மத்திய பா.ஜ.க. அரசை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
3. “நீட்”தேர்வை ரத்து செய்க! ‘பிளஸ் டூ’ மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களைச் சேர்த்திடுக!
நகர்ப்புற, ஏழை - எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து - அனிதா உள்ளிட்ட பல மாணவிகளின் தற்கொலைகளுக்கு காரணமாகி - இன்றைக்கு கிராமப்புற மருத்துவ உட்கட்டமைப்பிற்குத் தேவையான மருத்துவர்கள் உருவாகவே முடியாத நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள மருத்துவக் கல்விக்கான “நீட்” தேர்வினை, ஆரம்பகாலத்தில் இருந்தே, திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருவதை இக்கூட்டம் சுட்டிக்காட்டிட விரும்புகிறது. நீட் தேர்விலிருந்து விலக்களிக்க சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, அரசியல் உறுதிப்பாடு இன்மையால், ஒப்புதல் பெற இயலாமல், தமிழக மாணவ - மாணவியரையும், அவர்தம் பெற்றோரையும் ஏமாற்றி, பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியுள்ள அ.தி.மு.க. அரசு, இன்றைக்கு நீட் தேர்வுக்கு விலக்கும் பெறவில்லை; மாறாக “நீட் தேர்வை ஒழிப்போம்” என்று இதுவரை போட்டு வந்த “கபட வேடத்தை“ தற்போது கலைத்து ஊராருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி, “கொரோனா பேரிடர் காலத்திலும் செப்டம்பர் 13-ம் தேதி நீட் தேர்வு நடக்கும்” என்ற மத்திய அரசின் அறிவிப்பைக்கூட எதிர்க்கவும் முடியாமல், கூனிக்குறுகி வாய்பொத்தி நிற்பதற்கு இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. ஆகவே, செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நீட் தேர்வை ரத்து செய்யும் அவசரச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் இக்கூட்டம், “பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மருத்துவக் கல்வி சேர்க்கை நடைபெறும்” என்று உடனடியாக அவசரச் சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றிட வேண்டும் என்று அ.தி.மு.க. அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
4. ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலையில் விரைந்து நீதி கிடைக்க வேண்டும்!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தாக்குதலுக்குள்ளாகி; மனித உரிமைகளை மண்ணில் புதைத்து, கொடூர மனங்கொண்டு ஏற்படுத்தப்பட்ட கொலைவெறிக் காயங்களால் மரணமடைந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் கொலைகளை, “உடல்நலக்குறைவு” “மூச்சுத் திணறல்” என்றெல்லாம், உள்நோக்கத்துடன் சிறிதும் இரக்கமின்றி திசைதிருப்பி விமர்சித்த முதலமைச்சர் மற்றும் அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகின்ற வேளையில், குற்றம் புரிந்தவர்களும், அந்தக் குற்றத்தைத் திரையிட்டு மறைக்கக் காரணமாக இருந்தவர்களும் சட்டத்தின் முன்பு தயவு தாட்சண்யமின்றி நிறுத்தப்பட்டு, தாமதம் இல்லாமல் தக்க தண்டனை வழங்கப்பட்டு, நீதி - நியாயம் - நேர்மை காப்பாற்றப்பட வேண்டும் என்றும்; காவல் நிலைய மற்றும் நீதிமன்றக் காவல் மரணங்கள், இனிமேலாவது ஏற்பட்டுவிடாமல் இருக்க விரிவானதொரு பரிந்துரையை மாநில சட்ட ஆணையத்திடமிருந்து பெற்று - அதன் அடிப்படையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் எனவும் இக்கூட்டம் அ.தி.மு.க. அரசை கேட்டுக் கொள்கிறது.
5. விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் “மின்சார திருத்தச் சட்டம் 2020”-ஐத் திரும்பப் பெறுக!
விவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய நியமன அதிகாரம் உள்ளிட்ட மாநில அதிகாரங்களைப் பறிக்கும், மத்திய மின்சார திருத்தச் சட்ட மசோதா - 2020, கொண்டு வரப்படுவது, மத்திய - மாநில உறவுகளுக்கு சற்றும் ஏற்றதல்ல என்பதோ டு- கூட்டாட்சித் தத்துவத்தை கேலிக்கூத்தாக்கும் செயலும் ஆகும் என்று இக்கூட்டம் தீர்மானமாகக் கருதுகிறது. ஆகவே, இந்த மின்சார திருத்தச் சட்ட மசோதா 2020-ஐ உடனடியாகத் திரும்பப் பெற்றிட வேண்டும் என்று இக்கூட்டம் மத்திய பா.ஜ.க. அரசை கேட்டுக் கொள்கிறது.
மின்சார திருத்தச் சட்டம் குறித்து விளக்கவே மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் சமீபத்தில் சென்னை வந்து முதலமைச்சரைச் சந்தித்தார், சட்டப்பேரவை தேர்தல்வரை ஒத்திவைத்திடக் கோரிக்கை வைக்கப்பட்டது, என்றெல்லாம் ஊடகங்கள் வழியாகச் செய்திகள் கசிந்தாலும், - அந்தச் சந்திப்பில் மத்திய அரசு என்ன உறுதிமொழி கொடுத்து அனுப்பியது, அ.தி.மு.க. அரசின் உறுதியான நிலைப்பாடு என்ன என்பது குறித்து அதிகாரபூர்வமாக முதலமைச்சரிடமிருந்து எவ்வித செய்திக்குறிப்பும் வெளிவரவில்லை; இது தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் “அவர் சொன்னார்” “இவர் சொன்னார்” என மேற்கோள் காட்டி, “விவசாயிகளின் இலவச மின்சாரத்திற்குரிய பணத்தை நேரடியாக வழங்க வேண்டும் என்பதை மாநில அரசு கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது” என முதலமைச்சரிடம் மத்திய அமைச்சர் கூறி விட்டதாக செய்திகளைப் பூசி மெழுகி உள்நோக்கத்துடன் “கசிய” விடுவது கவலையை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஆகவே, மத்திய எரிசக்தித் துறை அமைச்சருக்கும் - முதலமைச்சருக்கும் நடைபெற்ற மின்சார திருத்தச் சட்டம் குறித்த பேச்சுவார்த்தை விவரங்களை நேர்மையாக உடனடியாக உள்ளது உள்ளபடி வெளியிட வேண்டும் என்றும்; மாநில அதிகாரங்களுக்கும், விவசாயிகளின் இலவச மின்சாரத்திற்கும் எதிராக உள்ள மின்சாரத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற அ.தி.மு.க. அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்றும்; எக்காரணம் கொண்டும், எந்த நிலையிலும், விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை பலிபீடத்தில் ஏற்றிவிடக் கூடாது என்றும்; இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
6. கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியிடம் தாரைவார்த்திடக் கூடாது !
தொடக்கத்திலிருந்தே கூட்டுறவு இயக்கத்தில் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக விளங்கும் தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகத்தை, ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள மத்திய பா.ஜ.க. அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்திற்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. கூட்டுறவு வங்கிகளை, நாட்டுடைமை ஆக்கப்பட்ட ஏனைய வங்கிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. மாநில கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது, மாநில கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகத்திலும் அணுகுமுறையிலும் பல்வேறு வகையான குழப்பங்களை ஏற்படுத்தும். மாநில மக்களின் தேவைகள், அவற்றின் அவசரம் மற்றும் அவசியத்தின் அடிப்படையில், கூட்டுறவு வங்கிகளுக்கென்று, ஜனநாயக ரீதியாக ஆற்றிட வேண்டிய பிரத்யேகமான கடமைகள் உண்டு. அவை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்கு வந்தால், அந்தந்தப் பகுதி மக்களின் உரிமைகளும் எதிர்பார்ப்புகளும் நசுக்கப்பட்டு பாதிப்புகள் ஏற்பட்டுவிடும்; இதுவரை போற்றிக் காப்பாற்றப்பட்டு வந்த “கூட்டுறவு” என்ற சீரிய சித்தாந்தமே சிதைந்து போகும். எனவே கூட்டுறவு இயக்கம் தொடர்ந்து பாதுகாக்கப்படவும், மக்களின் தேவைகள் உரிமைகளின் அடிப்படையில் நிறைவேற்றப்படவும், மத்திய பா.ஜ.க. அரசு அவசர சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்றும்; பாரம்பரியமான கூட்டுறவு இயக்கம் பலியாவதற்கு அ.தி.மு.க. அரசு மௌன சாட்சியாக இருத்தல் ஆகாது என்றும்; இக்கூட்டம் விரும்பிக் கேட்டுக் கொள்கிறது.
நபார்டு அளித்த நிதியை தவறாகப் பயன்படுத்தியுள்ள விவகாரத்தில் அனைத்து கூட்டுறவு வங்கிகளும், சங்கங்களும் நகைக் கடன் வழங்கக் கூடாது என்று அ.தி.மு.க. அரசு வாய்மொழி உத்தரவு போட்டிருப்பது உண்மை என்பதால், நபார்டிலிருந்து வந்த உத்தரவு என்ன என்பதை அ.தி.மு.க. அரசு வெளியிட்டு, நகைக்கடன் வழங்குவதை தொடர்ந்திட வேண்டும் என்றும், கொரோனா பேரிடர் வாழ்வாதார இழப்பில் இருந்து விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களை மீட்டிட ஏற்கனவே வழங்கியுள்ள அனைத்து நகைக் கடன்கள் மற்றும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்திட வேண்டும் என்று அ.தி.மு.க. அரசுக்கு இந்தக் கூட்டம் வேண்டுகோள் விடுக்கிறது.
7. மாணவர்களின் இறுதி செமஸ்டரை ரத்து செய்க! அனைத்து செமஸ்டர்களையும் ரத்து செய்க!
கொரோனாவின் உச்சகட்ட பாதிப்பில் இருக்கிறது தமிழகத்தின் மாவட்டங்கள். சென்னையிலும் நோய்ப் பாதிப்பு ஒரே தீவிரத்துடன் தொடருகிறது. இந்நிலையில் பல்கலைக்கழகங்கள் சார்பாக நடத்தப்படும் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை “செப்டம்பர் மாதத்தில் கண்டிப்பாக நடத்திய தீர வேண்டும்” என்று, நாட்டு நடப்புகளைக் கருத்தில் கொள்ளாமல், உப்பரிகையில் உட்கார்ந்து கொண்டு, மத்திய பல்கலைக்கழக மானியக் குழு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடுவதை இக்கூட்டம் முற்றிலுமாக நிராகரிக்கிறது. மாநிலக் கல்வி உரிமையில் தேவையின்றி குறுக்கிடும் அதிகார அத்துமீறலாகவே இந்த நடவடிக்கையை இக்கூட்டம் கருதுகிறது. அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள் - கல்லூரிகள் எல்லாம் “கொரோனா தனிமைப்படுத்தும் மையங்களாக” பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஊரடங்கால் வெவ்வேறு ஊர்களில் மாணவர்களும், பெற்றோரும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் எழுதுவதற்கும் சாத்தியமில்லை. இதுபோன்ற இக்கட்டான சூழலில் செமஸ்டர் தேர்வுகளை நடத்திட வேண்டும் என்று மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும் - பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு உள்ளிட்ட மற்ற ஆண்டுகளுக்கான செமஸ்டர் தேர்வுகளையும் ஆபத்தான கொரோனா பேரிடர் அசாதாரண காலம் கருதி ரத்து செய்து - மாணவர்களைத் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்திட வேண்டும் என்று இக்கூட்டம் மத்திய - மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது.
8. தி.மு.க. வெற்றிபெற்ற உள்ளாட்சி அமைப்புகளைப் புறக்கணிக்கும் அ.தி.மு.க. அரசுக்குக் கண்டனம்!
உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைகளும் அதிகாரங்களும் அ.தி.மு.க. அரசால் பறிக்கப்படுவதற்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. தெருவிளக்குகள், குடிநீர் இணைப்புகள் போன்ற ஊராட்சி மன்றங்களின் அடிப்படை அதிகாரத்தைக் கூட அபகரிக்கும் விதத்தில் - ‘ஜல் ஜீவன் மிஷன்’கீழ் "வீட்டு குடிநீர் இணைப்பு" வழங்கும் 2264.74 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் டெண்டர் விடுவதும், சோலார் விளக்குகளை மாநில அளவில் கொள்முதல் செய்து ஒரு பல்ப் வாங்கும் அதிகாரத்தைக் கூட ஊராட்சி மன்றத் தலைவர்களிடமிருந்து பறிப்பதும், கொரோனா நோய்க்கான கிருமிநாசினி மருந்துகள், ஸ்பிரேயர்கள் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சித் தலைவரே கொள்முதல் செய்துவிட்டு அதற்கான கட்டணங்களை மட்டும் ஊராட்சி மன்றங்களின் தலையில் கட்டுவது மிகவும் அடாவடித்தனமானது - கிராம சுயராஜ்யம் காண உருவாக்கப்பட்ட பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது என்று இக்கூட்டம் வேதனையுடன் பதிவு செய்கிறது. தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை முடக்கி வைத்து - ஊழலை மையப்படுத்தி, அதில் கட்டுப்பாடில்லாமல் எப்போதும் திளைத்துக் கொண்டும், நாவடக்கமின்றி நடமாடிக் கொண்டும் இருக்கும் உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு. வேலுமணிக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. ஜனநாயகத்தைப் போற்றி, மக்கள் பிரதிநிதிகளை மதித்து - தி.மு.க. சார்ந்த ஊராட்சி மன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளைப் புறக்கணிக்கும் எண்ணத்தை அ.தி.மு.க. அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளும் அதேவேளையில் – அ.தி.மு.க. அரசு திருந்தி நியாயமான வழிதேடத் தவறினால், நீதிமன்றத்தை நாடி தீர்வு காணப்படும் என்றும் இக்கூட்டம் எச்சரிக்கிறது.
9. திருப்போரூர் கழக எம்.எல்.ஏ. மீதான பொய் வழக்கிற்கு கண்டனம்! புலனாய்வை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றுக!
திருப்போரூர் கழகச் சட்டமன்ற உறுப்பினர் திரு. இதயவர்மன் தனது நிலத்தை பாதுகாக்க போராடவில்லை; மாறாக, "கோயில் நிலத்தைப் பாதுகாக்க வேண்டும்" என்ற ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று - மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அவர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றார். கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்படுவதைத் தட்டிக் கேட்டார். மக்களின் கோரிக்கைக்காகச் சென்றவரையும், அவரது தந்தையையும், அப்பகுதி மக்களையும் வெளியூரில் இருந்து வந்த கூட்டிவரப்பட்ட 50-க்கும் மேற்பட்ட ரவுடிகள் அ.தி.மு.க. முக்கிய பிரமுகரின் துணையோடு வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு - சட்டமன்ற உறுப்பினர், அவரது தந்தை, அவருடன் சென்ற ஊர்மக்கள் அனைவர் மீதும் பயங்கரத் தாக்குதல் நடத்தி - கொடுங்காயங்கள் விளைவித்து அவர்களது வீடுவரை விரட்டிச் சென்று அழிம்பு செய்தபோது ஆபத்தான நிலையில் - தற்காப்பிற்காக எம்.எல்.ஏ.,வின் தந்தை துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டதை மறைத்து - தவறாக எம்.எல்.ஏ. மீதே பொய் வழக்குப் பதிவு செய்து, தி.மு.க.,வின் நற்பெயரைக் கெடுக்க காவல்துறையைப் பயன்படுத்தியுள்ள அ.தி.மு.க. அரசுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. அங்குள்ள காவல்துறை அதிகாரிகள் இவ்வழக்கில் நேர்மையான புலனாய்வை நடத்த இதுவரை தவறி – அ.தி.மு.க. அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்குத் துணை நிற்பதால் - உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து நீதிமன்றத்தில் நிறுத்த இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
10. “வீட்டை விட்டு வெளியே போனால் அபராதம்”; “வீட்டிற்குள்ளே இருந்தால் அநியாய மின்கட்டணமா?”
“அ.தி.மு.க. அரசை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!”
ஊரடங்கைப் பிறப்பித்தது - மக்கள் வெளியில் போனால் கோடிக்கணக்கான ரூபாயை அபராதமாக வசூலித்தது - ஆயிரக்கணக்கான வாகனங்களை பறிமுதல் செய்தது எல்லாம் அ.தி.மு.க. அரசு. ஆனால், ஊரடங்குகால மின்கட்டணத்தை குறைக்கக் கோரினால் மட்டும், “நீங்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து மின்சாரத்தை அதிகமாகப் பயன்படுத்தியுள்ளீர்கள்; அதெல்லாம் கட்டணத்தைக் குறைக்க முடியாது” என்று மக்கள் மீதே பழி சுமத்துவதும் அ.தி.மு.க. அரசே! தவறான கணக்கீடுகளின் அடிப்படையில் ஏற்பட்ட அதிக மின்கட்டணத்தை, எல்லாத் தரப்பிலும் எவ்வளவோ எடுத்துரைத்தும் ஏற்காமல், அனைத்துத்தரப்பு மக்களையும் பெருந்துயரத்திற்கு உள்ளாக்கியுள்ள அ.தி.மு.க. அரசுக்கு மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஊரடங்கு காலகட்டத்தில் யாருக்கும் வேலையும் இல்லை; சம்பளமும் இல்லை; தொழிலும் இல்லை; வருமானமும் இல்லை. மின்சாரச் சட்டத்திலேயே “நுகர்வோருக்கு நியாயமான மின்கட்டணத்தை வழங்குவது மிக முக்கியம்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை வாரியமே அச்சட்டத்தின்கீழ்தான் இயங்குகிறது. ஆகவே, கொரோனா காலத்தை “சிறப்பு நேர்வாக”க் கருதி மின்கட்டணச் சலுகை அளிப்பதில் அ.தி.மு.க. அரசுக்கு எவ்வித தடையும் இல்லை. மத்திய பிரதேசம், கேரளம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களே கொரோனா கால மின்கட்டணச் சலுகைகளை அறிவித்துள்ள நிலையில், அ.தி.மு.க. அரசு மட்டும் முறையாகவே கணக்கிட்டுள்ளோம் என்று உயர்நீதிமன்றத்தின் முன்பு வாதாடிவிட்டு, இப்போது அதையே விளக்கமாக “செய்திக்குறிப்பு” ஒன்றைக் கொடுத்திருப்பது பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பற்றி கவலைகொள்ளாத கருணையற்ற போக்காகும்.
ஆகவே, அ.தி.மு.க. அரசின் இந்தக் கருணையற்ற போக்கைக் கண்டித்தும், ‘ரீடிங்’ எடுத்ததில் உள்ள குழப்பங்களை மின் நுகர்வோருக்கு சாதகமான முறையில் கணக்கிட்டு - ஊரடங்கு கால மின்கட்டணத்தை குறைக்கக் கோரியும் – குறிப்பாக, முந்தைய மாதத்திற்கு செலுத்திய பில் கட்டணத்தைக் குறைப்பதற்குப் பதில் அந்தத் தொகைக்குரிய “யூனிட்டுகளை” கழிக்க வலியுறுத்தியும், அப்படிக் குறைக்கப்பட்ட மின்கட்டணத்தை எளிய மாதத் தவணைகளில் செலுத்த மக்களுக்கு அனுமதி வழங்க கோரியும் வரும் 21-7-2020 (செவ்வாய்க்கிழமை) அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளின் முன்பு கறுப்புக் கொடி ஏற்றுவதோடு, கண்டன முழக்கங்களை எழுப்பிப் போராடுவது என்று மாவட்டச் செயலாளர்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.
கழக நிர்வாகிகள் இந்தப் போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும் விதத்தில் துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் இந்தப் போராட்ட நோக்கத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.